மாணவர்கள், இளைஞர்களின் ஜனநாயக உரிமையை தமிழ்நாடு அரசு பறிக்கக் கூடாது - இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கடந்த 30 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள, கல்வி நிறுவன மாணவர் பேரவை தேர்தல்களை உடனடியாக நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்
மு.வீரபாண்டியன்
Published on

சென்னை,

மாணவர்கள், இளைஞர்களின் ஜனநாயக உரிமையை தமிழ்நாடு அரசு பறிக்கக் கூடாது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் வலியுறுத்தல். இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

நிர்வாகக்குழு கூட்டம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு கூட்டம் இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான சென்னை பாலன் இல்லத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் க.சந்தானம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மாநில துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, எம்.ரவி, பொருளாளர் எம்.ஆறுமுகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சுப்பராயன், வை.செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கண்டனம்

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், இடதுசாரி கட்சிகள், தமிழ்நாடு காக்ரோச் கட்சி நடத்தும் போராட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்பதை தடுப்பதற்காக பள்ளிக்கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு உத்திரவிட்டுள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

ஜனநாயக உரிமை

இந்திய குடிமக்களுக்கு அரசியல் சிந்தனை, சமூக அக்கறை, கருத்துரிமை, அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை ஆகியவை அரசியலமைப்பு சட்டத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளன. மாணவர்களும், இளைஞர்களும் நாட்டின் குடிமக்களாவர். கல்வி நிறுவனங்களில் பயில்கிறார்கள் என்பதற்காக, அந்த அடிப்படை ஜனநாயக உரிமைகளை பறிக்க முடியாது.

முக்கிய சக்தி

18 வயதானவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கும் போது, அவர்கள் தமது அரசியல் செயல்பாட்டை வெளிப்படுத்தக்கூடாது என்று அரசு தடுப்பது, கல்வி நிறுவனங்களை ஜனநாயக விவாதங்களிலிருந்து துண்டித்து, இளைஞர், மாணவர்களை அரசியலற்றவர்களாக மாற்ற முயலும் அதிகார வர்க்க அணுகுமுறையாகும்.

நாட்டின் விடுதலை போராட்டம் உள்ளிட்டு, வரலாற்றில் மாணவர்களும், இளைஞர்களும் சமூக மாற்றத்தின் முக்கிய சக்தியாக திகழ்ந்துள்ளனர்.

குற்றச்செயலாகும்

அந்த போராட்ட வரலாற்றை மறுப்பதும், மாணவர்களின் அரசியல் உணர்வை குற்றமாக கருதுவதும் ஜனநாயகத்தின் அடிப்படைக்கே எதிரானதாகும். அரசியலமைப்புச்சட்டம் வழங்கும் உரிமைகளை குடிமக்கள் அனுபவிக்க விடாமல் தடுப்பதுதான் குற்றச்செயலாகும்.

திமாகி நக்சல்

நாட்டின் விடுதலை திருநாளன்று செங்கோட்டையில் தேசிய கொடியேற்றிய பிரதமர் மோடி, அரசு கொள்கைகளுக்கு மாற்றாக சிந்திப்பவர்களை, “திமாகி நக்சல்” என்றும், அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

துறைவாரி நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பட்டியலை, முகவரியோடு ஒரே நாளில் தயாரித்து தருமாறு வட்டாட்சியர் உத்திரவிட்டார்.

இதன் தொடர்ச்சியாகவே, இந்த உத்திரவும் வந்துள்ளது என்றே கருத வேண்டியுள்ளது. இந்த ஆணைகள் தற்போது திரும்ப பெறப்பட்டிருந்தாலும், இவற்றுக்கு காரணமானவர்களை கண்டறிந்து கடுமையான துறைவாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

ஜனநாயக மாண்புகள்

மாணவர்களின் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை தடுப்பதற்கு பதிலாக, அரசியலமைப்பு சட்ட உரிமைகள், ஜனநாயக மாண்புகள், சமூகநீதி, மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகியவற்றை கல்வி நிறுவனங்களில் வலுப்படுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் கருத்துகளை அமைதியான மற்றும் ஜனநாயக வழிகளில் வெளிப்படுத்துவதற்கான உரிமையை அரசு முழுமையாக பாதுகாக்க வேண்டும்.

மாணவர் பேரவை தேர்தல்

கடந்த 30 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள, கல்வி நிறுவன மாணவர் பேரவை தேர்தல்களை உடனடியாக நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com