

வேலூர்,
ராணிப்பேட்டையில் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்த டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்டுள்ளதோடு, டாஸ்மாக் கோட்ட மேலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட கடை ஊழியருக்கும் சேர்த்து ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை ஸ்கடர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 28). இவர் கடந்த மார்ச் 28-ந்தேதி ராணிப்பேட்டை பாலாறு பாலம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு பீர்வாங்க சென்றார். அங்கு அவர் 3 பீர்பாட்டில்களை வாங்கினார். ஒரு பீர் பாட்டிலின் விலை ரூ.170 வீதம் மொத்தம் ரூ.510 வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் அவரிடம் ஒவ்வொரு பாட்டிலுக்கு ரூ.20 கூடுதல் விலையாக சேர்த்து மொத்தம் ரூ.570 வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் விற்பனையாளரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு முறையான பதில் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர் வேலூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி மீனாட்சிசுந்தரம் விசாரணை செய்தார். விசாரணையின் முடிவில், சக்திவேலுக்கு இழப்பீடாக ரூ.3 ஆயிரமும், வழக்குச் செலவுத் தொகையாக ஆயிரம் ரூபாயும் ராணிப்பேட்டை டாஸ்மாக் கோட்ட மேலாளரும், சம்பந்தப்பட்ட கடை ஊழியரும் வழங்க வேண்டும். மேலும், டாஸ்மாக் கோட்ட மேலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட கடை ஊழியர் இணைந்து ரூ.1 கோடி தொகையை தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும். அந்தத் தொகையைக் கொண்டு தமிழகம் முழுவதும் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். மேலும் விதிமீறலில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என தீர்ப்பில் கூறி இருந்தார்.