

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. 10-வது நாளான 24-ந் தேதி அதிகாலையில் கோவிலின் கருவறை முன்பு பரணி தீப மும், மாலையில் கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்த நிலையில் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக கோவிலில் உள்ள நவகோபுரங்கள் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் வண்ண மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பஞ்சமூர்த்திகள் வலம் வரும் வாகனங்கள் வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது.
இதற்கிடையில், நேற்று முன்தினம் கோவிலின் அனைத்து கோபுரங்களையும் சுத்தம் செய்யும் பணி நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேலு தலைமையில், திருவண்ணாமலை தீயணைப்பு அலுவலர் பழனிச்சாமி மேற்பார்வையில் இப்பணிகள் நடைபெற்றன. அப்போது சுவாமி வீதிஉலா செல்ல பயன்படுத்தப்படும் ரிஷப வாகனத்தின் மீது ஏறி தீயணைப்பு வீரர்கள் கோபுரத்தை சுத்தம் செய்தனர். இதற்கு பல தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
சிவபெருமானின் நந்தி வாகனத்தை பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் கோபுரத்தை சுத்தம் செய்வது அவசியமான பணி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பக்தர்களின் இறை நம்பிக்கையை பலிகொடுப்பது நியாயமா என்றும் இந்த சம்பவத்திற்காக, கோவில் நிர்வாகம், பக்தர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், திருவண்ணாமலை கோவிலில் ரிஷப வாகனத்தின் மீது ஏறி நின்று தீயணைப்புப் படையினர் கோபுரங்களை சுத்தம் செய்த விவகாரத்தில் கோவில் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் பணியாளர் அசோச் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்துள்ளது. மேலும் இந்த சர்ச்சைக்கு தீயணைப்புப் படையினரும் மன்னிப்பு கோரி கோவில் நிர்வாகத்திடம் கடிதம் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.