தென்காசி: சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து பலி

ஆலங்குளம் பகுதியில் வெளியே விளையாட சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த பகுதியில் சிறுவனை தீவிரமாக தேடினர்.
தென்காசி: சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து பலி
Published on

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உடையாம்புளி கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை, கூலி தொழிலாளி. இவருக்கு கவிதா என்ற மனைவியும், முத்தரசன் (வயது 8), சுதர்சன்(5) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

நேற்று மதியம் சுதர்சன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். பின்னர் நீண்ட நேரமாகியும் அவன் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த பகுதியில் தீவிரமாக தேடினர். அப்போது அங்குள்ள 50 அடி ஆழ கிணற்றின் அருகே சிறுவனின் செருப்பு கிடந்ததை கண்டனர். கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தபோது யாரையும் காணவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் உடனடியாக ஆலங்குளம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றின் உள்ளே இறங்கி சிறுவனை தேடினர். நீண்டநேர தேடுதலுக்கு பிறகு சிறுவன் சுதர்சன் பிணமாக மீட்கப்பட்டான்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுதர்சனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுவன் விளையாடியபோது கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com