

வடலூர்,
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா நடைபெறுவது வழக்கம். இதன்படி வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 150வது தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று காலை 7:30 மணியளவில் தருமசாலை மற்றும் ஞானசபையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் 10:30 மணியளவில் கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நேற்று இரவு தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இந்த விழாவினையொட்டி தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று தைப்பூச தினத்தையொட்டி காலை 6:00 மணிக்கு ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து காலை 10:00, மதியம், 1:00, இரவு, 7:00, 10:00 மற்றும் 29ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கும் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.
முன்னதாக வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திரு அறையில் உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும்.
ஜோதி தரிசன விழாவில் தமிழகம் மட்டுமின்றி நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த சன்மார்க்க அன்பர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதற்காக தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் வடலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று தருமசாலை பிரசங்க மேடையில் சன்மார்க்க சொற்பொழிவு, திரு அருட்பா பாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில், ஊரன் அடிகளார் உள்ளிட்டோர் சொற்பொழிவு நிகழ்த்துகின்றனர். மாலை, 6:00 மணியளவில், மகாமந்திரம் ஓதுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர், பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்களும், சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் இந்த ஆண்டு அந்த கலை நிகழ்ச்சிகள் தடைசெய்யப்பட்டுள்ளது.