ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய தலைவர் நியமனத்தை திரும்ப பெற வேண்டும் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

நாக்பூர் குரு பீட பின்னணி இல்லாத, மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதிக்கு தன்னை அர்ப்பணித்து கொண்ட நீதிபதி ஒருவரை பழங்குடியினர் நல ஆணையத்தின்  தலைவர் பொறுப்பில் நியமிக்க  வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய தலைவர் நியமனத்தை திரும்ப பெற வேண்டும் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
மு.வீரபாண்டியன்
Published on: 

சென்னை,

தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்று நீதிபதி எம் .வி .முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளதை திரும்ப பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது . இதுகுறித்து ,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

  நீதிபதி எம்.பி .முரளிதரன்

தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்று நீதிபதி எம் .வி .முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் தலைமையில் அமைந்த உயர்மட்ட குழு,  அவரது  பெயரை பரிந்துரைத்ததாக தகவல்கள் இருக்கின்றன.  நீதிபதி எம்.பி .முரளிதரன், முன்பு மணிப்பூர் ஐகோர்ட்டில் பணிபுரிந்த போது, "மெய்தி  இன மக்கள், தங்களை  பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் " என்று தீர்ப்பளித்தார். 

கலவரம்

இந்த தீர்ப்பின் விளைவாக மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு, மூன்றாண்டுகள் கடந்தும் கூட, இன்னும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. நீதிபதி எம்.வி.முரளிதரன் அளித்த தீர்ப்பு “முற்றிலும் தவறானது,

 உண்மைகளுக்கு முரணானது, வெறுக்கத்தக்கது”  என்று சுப்ரீம் கோர்ட்டு கடுமையான சொற்களில் கருத்துக்களை தெரிவித்தது. மேலும் "தன்னை திருத்தி கொள்வதற்கு நீதிபதி முரளீதரனுக்கு  அவகாசம் அளித்தோம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை" என்று அப்போதைய  இந்திய தலைமை நீதிபதி ஒய் .வி.  சந்திரசூட் கூறியிருக்கிறார். 

பேராபத்தானது

பழங்குடியினர்  வரலாறு, சமூக உறவுகள் தொடர்பாக போதுமான புரிதலும், ஞானமும் இல்லாத  ஒருவரை, அதே துறையின் நீதிமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்ட  மாநில ஆணையத்துக்கு தலைவராக நியமித்திருப்பது பொருத்தமற்றது. பேராபத்தானது. கால நீடிப்பில் செயல்படும் தலைமை செயலாளர் தலைமையிலான குழுவின் பரிந்துரை, செயலாக்கப்பட்டிருப்பது, ஏராளமான வினாக்களை எழுப்புகிறது. எனவே, எம் .வி .முரளீதரன் நியமனத்தை  தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்து,  உடனடியாக திரும்ப பெற வேண்டும் .

மதச்சார்பின்மை

நாக்பூர் குரு பீட பின்னணி இல்லாத, மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதிக்கு தன்னை அர்ப்பணித்து கொண்ட நீதிபதி ஒருவரை  பழங்குடியினர் நல ஆணையத்தின்  தலைவர் பொறுப்பில் நியமிக்க  வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டு கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X