‘தமிழகப் பெண்களுக்கு அரசு வழங்கக்கூடிய ஆகச்சிறந்த பரிசு "பூரண மதுவிலக்கு" மட்டுமே’ - ராமதாஸ்

தமிழக அரசு மதுவை விற்றுக்கொண்டு மகளிர் தினத்தைக் கொண்டாடுவது முரண்பாடுகளின் உச்சம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
‘தமிழகப் பெண்களுக்கு அரசு வழங்கக்கூடிய ஆகச்சிறந்த பரிசு "பூரண மதுவிலக்கு" மட்டுமே’ - ராமதாஸ்
Published on

சென்னை,

மதுவினால் ஏற்படும் வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’மதுவால் கணவனை இழந்த இளம் கைம்பெண்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கச் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு மதுவை விற்றுக்கொண்டு மகளிர் தினத்தைக் கொண்டாடுவது முரண்பாடுகளின் உச்சமாகும். தமிழகத்தில் குடும்பங்களின் சீரழிவுக்கு முதன்மைக் காரணமாக இருப்பது அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகள் தான். ஒருபுறம் பெண்களை கைம்பெண்களாக மாற்றிக்கொண்டே மதுவை அரசே விற்பனை செய்துவிட்டு, மறுபுறம் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகவும், அவர்களைக் கௌரவிப்பதாகவும், அவர்களுக்கு உரிமைத் தொகை கொடுத்துக்கொண்டு, அவர்களை கண்ணீரில் மூழ்கடித்துவிட்டு, பின் அக்கண்ணீரை துடைக்க முற்படுவது மகளிர் தினத்தைக் கொண்டாடுவது வேடிக்கையானது.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே அரசின் நோக்கம்" என்று மேடைகளில் பேசிக்கொண்டே அந்தப் பெண்களின் கணவன்மார்களையும், மகன்களையும் மதுவுக்கு அடிமையாக்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பதும் முரண்பாடுகளின் உச்சம். மதுவினால் ஏற்படும் வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே.

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு அரசு வழங்கும் வெறும் வாழ்த்துகளோ அல்லது சில விருதுகளோ அவர்களின் வாழ்வை மேம்படுத்தாது. தமிழகப் பெண்களுக்கு அரசு வழங்கக்கூடிய ஆகச்சிறந்த, உண்மையான பரிசு "பூரண மதுவிலக்கு" மட்டுமே. உடனடியாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடுவதற்கான கால அட்டவணையை அரசு அறிவிக்க வேண்டும். மதுவால் கணவனை இழந்த இளம் கைம்பெண்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கச் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை விட, அவர்களின் தாலி பாக்கியத்திற்கும், குடும்ப அமைதிக்கும் அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே உண்மையான சமூகநீதியாகும்.

இதற்கிடையே அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான தேர்வு முடிவில் தமிழகத்திலிருந்து தேர்ச்சி பெற்ற 56 வெற்றியாளர்களில் 19 பேர் பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பது மகளிர் தின நன்னாளில் பெருமை தரும் செய்தியாகும். வாழ்க்கையே போர்க்களம், வாழ்ந்துதான் பார்க்கணும். எங்களின் பெண் தெய்வங்களுக்கு இதயம் நிறைந்த மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com