

சென்னை,
கைது செய்யப்பட்ட அனைத்துத் தலைவர்களையும், மாணவர்களையும், போராட்டக்காரர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக, மதுரை நாடாளுமன்ற தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, புதுடெல்லி ஜந்தர் மந்தரில் இன்று நடைபெறவிருந்த போராட்டத்தைத் தடுக்க, டெல்லி காவல்துறையும் துணை ராணுவப் படையினரும் கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறைகள் கடும் கண்டனத்திற்குரியவை.
ஜனநாயகத்தில் அரசிடம் கேள்வி கேட்பதும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை விமர்சிப்பதும், தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியாகப் போராடுவதும் மக்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமைகள். அந்த உரிமைகளைப் பயன்படுத்த முன்வரும் மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோரை ஆங்காங்கே கைது செய்வதும், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களை முற்றுகையிடுவதும் ஜனநாயகத்தின் அடிப்படைகளையே கேள்விக்குள்ளாக்குகின்றன.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் எம்.ஏ. பேபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் டி. ராஜா, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர் பினராயி விஜயன், தோழர் உ. வாசுகி, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் பெ. சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் தோழர் ஜான் பிரிட்டாஸ் எம்.பி. உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . கைது செய்யப்பட்ட தலைவர்களை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காவல்துறை வாகனத்திலேயே வைத்துச் சுற்றி வருகின்றனர் . சி.ஜே.பி. தலைவர் அபிஜித் தீப்கே விமானத்திலேயே கைது செய்யப்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதன் மூலம் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியாது. கேள்வி கேட்பவர்களைக் கைது செய்வதன் மூலம் தேர்தல் ஆணையர் செய்த குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது.
கருத்துச் சுதந்திரத்தையும் அமைதியான போராட்ட உரிமையையும் மதிக்க வேண்டிய மத்திய அரசு, காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரைப் பயன்படுத்தி அரசியல் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த முயல்வது கண்டனத்திற்குரியது . கைது செய்யப்பட்ட அனைத்துத் தலைவர்களையும், மாணவர்களையும், போராட்டக்காரர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
ஜனநாயகத்தின் குரலை அடக்க நினைப்பவர்கள் வரலாற்றின் முன் பதில் சொல்ல வேண்டியிருக்கும். போராட்டங்களை ஒடுக்குவதால் மக்களின் கேள்விகளையும் உரிமைக் குரல்களையும் ஒருபோதும் ஒழித்துவிட முடியாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.