சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் - அன்புமணி

கடந்த மார்ச் மாதம் 7-ஆம் தேதி சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது.
அன்புமணி
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மேலும் ரூ.29 உயர்த்தியுள்ளன. இதனால் சென்னையில் இதுவரை ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு பயன்பாட்டுக்கான எரிவாயு உருளையின் விலை ரூ.957.50 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மக்களின் அன்றாட தேவையான சமையல் எரிவாயு உருளை விலை அண்மை காலத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களை மிகக்கடுமையாக பாதிக்கும்.

மேலும் உயர்வு

கடந்த மார்ச் மாதம் 7-ஆம் தேதி சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது. இப்போது மேலும் ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த மார்ச் மாதத்தில் ரூ. 868.50 ஆக இருந்த சமையல் எரிவாயு விலை 3 மாதங்களில் ரூ.89 உயர்ந்திருக்கிறது. இந்த காலத்தில் மக்களின் வருவாய் ஒரு விழுக்காடு கூட உயராத நிலையில் எரிவாயு விலை 10.25% உயர்ந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பெரும் தட்டுப்பாடு

சமையல் எரிவாயு விலை உயர்வின் பின்னணியில் உள்ள காரணங்களையும், நியாயங்களையும் புரிந்து கொள்ள முடிகிறது. மேற்காசியப் போர் உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில் எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகியவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன், விலையும் உயர்ந்திருப்பது தான் இதற்கு காரணம் என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், அனைத்து நெருக்கடிகளையும் கடந்து விலை உயர்விலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய தேவை அரசுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் உள்ளது. அந்த கடமையை நிறைவேற்றும் வகையில் பன்னாட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்களும், அரசும் இன்னும் சில மாதங்களுக்கு தாங்கி கொள்ள வேண்டும்; மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com