தமிழகத்தை தலைநிமிரச் செய்த கர்மவீரர் காமராஜரின் வாழ்க்கைப் பயணம்

1952-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழகத்தை தலைநிமிரச் செய்த கர்மவீரர் காமராஜரின் வாழ்க்கைப் பயணம்
Published on

தமிழகத்தை தலைநிமிரச் செய்த தியாகச் செம்மல், 'கல்விக்கண் திறந்த' கர்மவீரர் காமராஜர். எளிமையின் இலக்கணமாகவும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய மாபெரும் தலைவராகவும் விளங்கிய காமராஜரின் வரலாற்றை அறிவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.

காமராஜர் 1903-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள் விருதுநகரில் குமாரசாமி - சிவகாமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் காமாட்சி என்பதாகும். வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை 6-ம் வகுப்போடு முடித்த இவர், இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, பலமுறை சிறைவாசம் அனுபவித்தார்.

சுதந்திரப் போராட்டம்

தனது மாமாவின் துணிக்கடையில் வேலை பார்த்தபோதே, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஆர்வம் காட்டினார். 15 வயதிலேயே ஜாலியன் வாலாபாக் படுகொலையின் தாக்கம், காமராஜரிடம் சுதந்திர வேட்கையைத் தூண்டியது. 1930-ல் காந்தியடிகள் நடத்திய உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்துகொண்டு ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.

அரசியல் தொண்டு

1930-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேதாரண்யத்தில் நடந்த காந்தி அடிகளின் உப்பு சத்தியாக்கிரகதில் கலந்து கொண்டார். அதனால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அந்த முதல் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் மேலும் 5 முறை சிறைவாசம் அனுபவித்திக்கிறார். கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் அவர் சிறையிலேயே கழித்திருக்கிறார். 1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொறுப்பை அடுத்த 14 ஆண்டுகளுக்கு வகித்தார். 1952-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 2 ஆண்டுகளில் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார்.

'கிங் மேக்கர்'

விடுதலைக்குப் பின்னர் 1954-ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சரானார். மிகவும் தயக்கத்தோடுதான் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே முதன்முறை. ஆனால் ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற அவர்தான் அடுத்த 9 ஆண்டுகளுக்கு தலை சிறந்த தலைமைத்துவத்தை தமிழகத்திற்கு வழங்கினார். அவரது கால கட்டத்தில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற பெருமையை பெற்றது தமிழ்நாடு. ஒன்பது ஆண்டுகள் சிறப்பான ஆட்சி புரிந்து, இந்திய அரசியலிலும் பெரும் செல்வாக்கு செலுத்தினார். பல பிரதமர்களை உருவாக்கியதால் இவரை 'கிங் மேக்கர்' (Kingmaker) என்றும் அழைத்தனர்.

நீர்ப்பாசனத் திட்டங்கள்

தமிழகத்தின் நீர்ப்பாசனத் தேவைகளுக்காகவும், விவசாயத்தைக் காக்கவும் பல முக்கிய அணைகள் கட்டப்பட்டன. வைகை, மணிமுத்தாறு, அமராவதி, சாத்தனூர், கீழ்பவானி, ஆழியாறு, கிருஷ்ணகிரி, ஆரணியாறு மற்றும் வீடுர் ஆகியவை அவர் கட்டிய முக்கிய அணைகளில் அடங்கும்.

தொழில் வளர்ச்சி

இவரது ஆட்சிக் காலத்தில்தான் தமிழகம் தொழில் துறையில் பெரும் வளர்ச்சி கண்டது. நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை, ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலை, மற்றும் மேட்டூர் காகிதத் தொழிற்சாலை போன்ற பல முக்கிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.

கல்விப் பணிகள்

ஏழை மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக மதிய உணவுத் திட்டம் மற்றும் இலவச சீருடைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜரின் பொற்கால ஆட்சி வறுமையில் வாடிய தமிழ்நாட்டில் கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் காமராஜர். மூடப்பட்டிருந்த 6,000 பள்ளிகளை மீண்டும் திறந்ததுடன், 14,000 புதிய பள்ளிகளையும், ஏழை எளிய குழந்தைகள் பசி இல்லாமல் படிக்க வேண்டும் என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டு வந்தார்.

அரசியலில் நேர்மை, எளிமை, மற்றும் தொண்டு ஆகியவற்றைத் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தவர் காமராஜர். 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், அவரது சாதனைகள் என்றும் தமிழக மக்களால் நினைவுகூரப்படும்.

எளிமையான வாழ்வு

அதற்கு அடுத்த ஆண்டு(1976) அவருக்கு உயரிய “பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவித்தது இந்திய அரசு. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்ததால் தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை காமராஜர். அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை மேலும் சிறு வயதிலேயே கல்வியை கைவிட்டதை நினைத்து வருந்திய அவர் தான் சிறைவாசம் சென்ற போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில நூல்களை வாசிக்க கற்றுக்கொண்டார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போதும் அவருடைய தாய் விருதுநகரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு வீட்டில்தான் வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது.

கர்ம வீரர்

தன் குடும்பம் என்பதற்காக தன் தாய்க்குக்கூட எந்த சலுகையும் வழங்கியதில்லை. அவர் தனக்கென வைத்திருந்த சொத்துக்கள் என்ன தெரியுமா? சில கதர் வேட்டி சட்டைகளும், சில புத்தகங்களும்தான். பதவிக்குரிய பந்தா எப்போதும் அவரிடம் இருந்ததே இல்லை எந்த நேரத்திலும் எவரும் அவரை தடையின்றி சந்திக்க முடியும். அதனால்தான் அவரை கர்ம வீரர் என்றும், கருப்பு காந்தி என்றும் இன்றும் போற்றுகிறது தமிழக வரலாறு. அப்படிப்பட்ட ஒரு கன்னியமான நேர்மையான இன்னொரு தலைவனை தமிழக வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் இனி சந்திக்குமா என்பது சந்தேகமே?

முறையான கல்விகூட இல்லாத ஒருவர் நாட்டின் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகி இவ்வுளவும் செய்திருக்கிறார் என்றால் “துணிந்தவனால் எதையும் செய்ய முடியும் என்றுதானே பொருள்” நல்லாட்சி என்ற வானம் வசப்பட்டதற்கு அவருடைய சமதர்ம சிந்தனையும், நாடும் மக்களும் நலம்பெற வேண்டும் என்ற வேட்கையும், சுயநலமின்றி சமூக நலத்தொண்டு செய்ய வேண்டுமென்ற நல் எண்ணமும்தான் காரணம். அதே காரணங்கள் நமக்கும் வானத்தை வசப்படுத்த உதவும். வாழ்க்கையில் நம்பிக்கையோடும் விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படாமலா போகும்!

கல்வி வளர்ச்சி நாள்

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15-ந் தேதி தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி நாளாக அன்றைய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்தார். அன்றுமுதல் ஒவ்வொரு வருடமும் காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com