

சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக, நாளை பிற்பகல் 2.30 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் பிரசார பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் “தாயுக்கும் தாயான கட்சி” என்கிற பிரசார பாடலை காங்கிரஸ் வெளியிடுகிறது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
காங்கிரஸ் கொள்கை முழக்க பிரசார பாடல் வெளியிடும் நிகழ்ச்சி & மேலிடப் பார்வையாளர்களின் ஆலோசனைக் கூட்டம்
நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 28 தொகுதிகளுக்கான மேலிடப் பார்வையாளர்களின் ஆலோசனைக் கூட்டம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. தலைமையில், நாளை (11.4.2026) சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறவுள்ளது.
இதில், அகில இந்திய காங்கிரஸ் மூத்த பார்வையாளர்கள் திரு. முகுல் வாஸ்னிக், திரு. உத்தம்குமார் ரெட்டி, திரு. குவாசி நிசாமுதின், எம்.எல்.ஏ., அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் திரு. சூரஜ் எம்.என். ஹெக்டே, திரு. நிவேதித் ஆல்வா ஆகியோர் உடன் பங்கேற்கிறார்கள்.
முன்னதாக, பிற்பகல் 2.30 மணியளவில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக இளைய கம்பன் எழுதி, திரு. ஸ்டீபன் ராயல் இசையமைத்துள்ள, ‘தாயுக்கும் தாயான கட்சி” என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கொள்கை முழக்க பிரச்சார பாடல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.