அரசியல் சூட்டை தணித்து அள்ளித்தந்த வானம்: தமிழகம் நோக்கி பொங்கி வரும் காவிரி நீர்

காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக தமிழகம் - கர்நாடகா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
அரசியல் சூட்டை தணித்து அள்ளித்தந்த வானம்: தமிழகம் நோக்கி பொங்கி வரும் காவிரி நீர்
Published on

சென்னை,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் தமிழகம் நோக்கி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

குறுவை சாகுபடி பாதிப்பு

தமிழகத்தில் முக்கிய அணைகளில் ஒன்றான மேட்டூர் அணையில் 79 அடிக்கும் தண்ணீர் குறைவாக இருந்த காரணத்தால், இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.

இதனால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், கர்நாடகம் தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை தமிழகம் கேட்டது. ஆனால், வழக்கம் போல் கர்நாடகம் மறுத்துவிட்டது.

கர்நாடகம் மறுப்பு

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் தமிழக அரசு காவிரியில் கர்நாடகம் அரசு தண்ணீர் திறந்துவிட தனது வாதங்களை அழுத்தமாக முன்வைத்தது. இதனைத் தொடர்ந்து, 15 நாட்களுக்கு காவிரியில் வினாடிக்கு 3,500 கனஅடி வீதம், அதாவது 4½ டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட கர்நாடகத்தை காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தியது. ஆனால், அதற்கும் கர்நாடகம் மறுத்துவிட்டது.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

அதுமட்டுமல்லாமல், காவிரி மேலாண்மை ஆணையத்தில் இதுகுறித்து முறையிடுவோம் என்றுகூறி, கர்நாடக அரசு முறையிட்டது. இந்த முறையீட்டின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த மாதம் (ஜூலை) 24-ந் தேதி மீண்டும் கூடியது. அப்போது கர்நாடகத்தின் வாதத்தை நிராகரித்த ஆணையம், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நடந்துகொள்ள கர்நாடக அரசை வலியுறுத்தியதுடன், காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த அளவில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடவும் கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.

இருமாநில முதல்-மந்திரிகள் சந்திப்புக்கு எதிர்ப்பு

இந்த உத்தரவுக்கு கர்நாடக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தன. இதற்கிடையே, தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் - கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் இன்று பெங்களூருவில் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்து, இரு மாநில முதல்-மந்திரிகளும், தங்கள் மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதற்கு மத்தியில், தமிழக எதிர்க்கட்சிகள் இருமாநில முதல்-மந்திரிகள் சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

அரசியல் சூட்டை தணித்த மழை

கர்நாடகத்திலும் எதிர்ப்பு வலுத்ததால், கர்நாடக மாநில முதல்-மந்திரி டி.கே.சிவகுமார், தமிழக முதல்-அமைச்சர் இப்போது வரவேண்டாம் என்று கூறிவிட்டார். இப்படி, இருமாநில அரசியலில் அனல் பறந்து கொண்டிருந்த நேரத்தில், அரசியல் சூட்டை தணிக்கும் வகையில் கடந்த மாதம் (ஜூலை) 31-ந் தேதி, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால், பாதுகாப்பு கருதி கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போதைய நிலையில், தமிழகத்திற்கு 28 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பொங்கி வந்த காவிரி இப்போது எல்லையை கடந்து தமிழக மண்ணை முத்தமிட்டு இருக்கிறது. இதனால்,டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீர்வரத்து அதிகரிக்கும்

தற்போதைய நிலையில், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜசாகரில் 91.8 அடியும் (மொத்த கொள்ளளவு 124.8 அடி), கபினியில் 56.28 அடியும் (65 அடி), ஹேரங்கியில் 127.55 அடியும் (129 அடி), ஹேமாவதியில் 100.98 அடியும் (117 அடி) தண்ணீர் உள்ளது.

கர்நாடக அணைகள் வேகமாக நிரம்புவதால், தமிழகத்திற்கான தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், மேட்டூர் அணையில் 73.82 அடி கொள்ளளவு தண்ணீர் உள்ளது. காவிரியில் திறந்துவிடப்பட்ட நீர் மேட்டூர் அணையை அடையும்போது, தண்ணீர் அளவு வேகமாக உயரும். டெல்டா பாசன பகுதியில், குறுவை சாகுபடி தப்பினாலும் அடுத்து வரும் சம்பா சாகுபடிக்காவது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடியும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com