தமிழக அரசு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்!

குற்றச் சம்பவங்களில் கைது செய்யப்படும் நபர்களில் இளம் சிறார்களும் இடம்பெறுவது மிகவும் கவலைக்குரியதாகும்.
ராமதாஸ்
Published on

சென்னை

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, தாக்குதல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள், பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் ஆகியவை பொதுமக்களிடையே கடும் அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளன. மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அருகே சிறுவன் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், கோயம்புத்தூர் பகுதியில் இளம் பெண் ஒருவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், உளுந்தூர்பேட்டை அருகே நீதிமன்றத்திற்கு சென்று திரும்பிய நபரை தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்து தாக்க முயற்சிக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து மக்களிடையே மிகப்பெரிய கேள்வியை எழுப்புகின்றன.

கடந்த 10 முதல் 15 நாட்களுக்குள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. குறிப்பாக, குற்றச் சம்பவங்களில் கைது செய்யப்படும் நபர்களில் இளம் சிறார்களும் இடம்பெறுவது மிகவும் கவலைக்குரியதாகும். இளம் தலைமுறையினரிடையே வன்முறை மனப்பான்மை, காழ்ப்புணர்ச்சி, பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் போன்றவை அதிகரித்து வருவது சமூகத்தின் எதிர்காலத்திற்கே ஆபத்தான சூழலை உருவாக்கி வருகிறது.

தமிழ்நாட்டில் கொலைகாரர்கள், போதைப்பொருள் வியாபாரிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமை செய்பவர்கள் சுதந்திரமாகச் சுற்றித் திரிவதாக பொதுமக்கள் உணரும் நிலை உருவாகியுள்ளது. இது மிகவும் வேதனையளிக்கும் மற்றும் கவலைக்கிடமான சூழ்நிலையாகும். கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு கொடூர சம்பவங்களில் இருந்து காவல்துறை போதிய பாடங்களை கற்றுக்கொண்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியதாக மக்கள் மத்தியில் நம்பிக்கை உருவாகவில்லை. புதிய தமிழக அரசு தனது நிர்வாகத் திறனை சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பில் முழுமையாக வெளிப்படுத்த வேண்டிய கட்டாய சூழல் தற்போது நிலவுகிறது.

எனவே, தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் நான் வலியுறுத்துவது:

மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு நிலையை முழுமையாக சீராய்வு செய்து, குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அனுபவமிக்க உளவுத்துறை காவல் அலுவலர்களை நியமித்து, முன்கூட்டியே குற்றத் திட்டங்கள் மற்றும் வன்முறைச் செயல்கள் குறித்து தகவல் சேகரித்து குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். “பழிக்குப் பழி” அடிப்படையில் நடைபெறும் தொடர் வன்முறைச் சம்பவங்களை கண்காணிக்க சிறப்பு காவல் படைகளை அமைத்து, தொடர் குற்றவாளிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குற்றப் பின்னணி கொண்ட நபர்களின் செயல்பாடுகளை அந்தந்த பகுதி காவல் நிலையங்கள் தொடர்ந்து கண்காணித்து, முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் வன்முறை, போதைப்பொருள் பழக்கம் மற்றும் குற்றச் செயல்கள் குறித்து காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறை இணைந்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும். மாணவர்கள் மற்றும் இளைஞர்களை நல்வழிப்படுத்த ஒருங்கிணைந்த சிறப்பு குழுவை அமைத்து செயல்பட வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்த வேண்டும். இரவு ரோந்து, கண்காணிப்பு கேமராக்கள், சைபர் கண்காணிப்பு, குற்றப் பதிவுகளின் பகுப்பாய்வு உள்ளிட்ட நவீன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும். நீதிமன்றங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கூடுதல் காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இளம் சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான சமூக மற்றும் மனநல காரணிகளை அரசு விரிவாக ஆய்வு செய்து, தடுப்பு மற்றும் மறுவாழ்வு திட்டங்களை கொண்டு வர வேண்டும்.

மக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்பை உறுதி செய்வது எந்த அரசுக்கும் மிக முக்கியமான பொறுப்பாகும். தமிழகத்தில் மக்கள் அச்சமின்றி, பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்க தமிழக அரசு மற்றும் காவல்துறை உடனடியாக கடுமையான, திட்டமிட்ட மற்றும் நீடித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com