அதிரும் தமிழக தேர்தல் களம்: 4 முனைப்போட்டி யாருக்கு சாதகம்..?

2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. இடையேதான் கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது.
அதிரும் தமிழக தேர்தல் களம்: 4 முனைப்போட்டி யாருக்கு சாதகம்..?
Published on

சென்னை,

தேர்வு, தேர்தல் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் கிடையாது. தேர்வின்போது, பேப்பரில் மாணவர்கள் எழுதியதற்கு ஆசிரியர்கள் மதிப்பெண் அளிப்பார்கள். தேர்தலின்போது, பொது வாழ்வில் அரசியல்வாதிகளின் செயல்பாட்டுக்கு மக்கள் மதிப்பெண் கொடுப்பார்கள்.

மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஆண்டு பொதுத்தேர்வு வருவதுபோல், அரசியல்வாதிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது பொதுத்தேர்தல். அந்த வகையில், 17-வது சட்டசபை தேர்தல் அடுத்த (ஏப்ரல்) மாதம் 23-ந் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது.

அனல் பறக்கும் தேர்தல் களம்

இதுவரை நடைபெற்ற 16 சட்டசபை தேர்தலின்போது இருந்த அதே பரபரப்பும், விறுவிறுப்பும் கொஞ்சமும் குறையாத வகையில் இந்த தேர்தலிலும் அனல் பறந்து வருகிறது. தனித்து போட்டி என்ற த.வெ.க. தலைவர் விஜய்யின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுவது உறுதியாகி இருக்கிறது.

கடந்த முறை 13 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தி.மு.க., இந்த முறை 26 கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்து வலுவாக களம் காண்கிறது. ஆனால், இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒருசில கட்சிகள், பேச்சு வார்த்தையின்போது எதிர் தரப்பினரிடமும் பேசிக் கொண்டிருந்ததால், அவர்கள் அங்கு செல்வதை தடுக்க கேட்பதை கொடுப்பதாக சொல்லி கூட்டணி வளையத்துக்குள் தி.மு.க. கொண்டு வந்திருக்கிறது. அதனால், தொகுதி பங்கீட்டின்போது, இப்போது சிக்கலை சந்தித்து வருகிறது.

Also Read
தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - ஒப்பந்தம் கையெழுத்து
அதிரும் தமிழக தேர்தல் களம்: 4 முனைப்போட்டி யாருக்கு சாதகம்..?

த.வெ.க.வை இணைக்கும் முயற்சி தோல்வி

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. நடிகர் விஜய்யின் த.வெ.க.வையும் இணைத்தால், தேர்தலில் வெற்றி நிச்சயம் என்ற எண்ணத்துடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அது தோல்வியில் முடிந்துபோனது.

எப்படி, 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜயகாந்த், 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சீமான் புதிய வரவாக இருந்ததுபோல, அதே 10 ஆண்டு கால இடைவெளியில் இப்போது (2026) நடிகர் விஜய்யின் த.வெ.க.வும் முதல் முறையாக தேர்தல் களம் காண்கிறது.

தி.மு.க.வுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் பலம்

அதுபோக, கடந்த 2 சட்டசபை தேர்தல்களில் (2016, 2021) தனித்து போட்டியிட்ட இயக்குநர் சீமானின் நாம் தமிழர் கட்சி இந்த முறையும் தனித்தே களம் காண்கிறது. அதனால், இந்தத் தேர்தலில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் கொஞ்சமும் குறைவு இருக்காது.

இனி 4 முனைப்போட்டி யாருக்கு சாதகம் என்பதை பற்றி பார்ப்போம்.

தி.மு.க. கூட்டணிக்கு எப்போதுமே சிறுபான்மையினர் வாக்குகள் பக்க பலமாக இருக்கும். தற்போதும் அந்தக் கூட்டணியில் 4 இஸ்லாமிய கட்சிகளும், பல கிறிஸ்தவ அமைப்புகளின் ஆதரவும் இருப்பதால், இந்த முறையும் எப்போதும் போல் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும் என்று அக்கட்சி எதிர்பார்க்கிறது.

Also Read
கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணையில் முறையான பதிலை வழங்கியிருக்கிறேன் - செந்தில் பாலாஜி பேட்டி
அதிரும் தமிழக தேர்தல் களம்: 4 முனைப்போட்டி யாருக்கு சாதகம்..?

அ.தி.மு.க. கூட்டணிக்கு சிக்கல்

அ.தி.மு.க.வை பொறுத்தவரை கடந்த தேர்தலைப்போல, இந்த முறையும் பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக அ.ம.மு.க.வும் இடம்பெற்றுள்ளது. என்றாலும், கடந்த முறை ஒருங்கிணைந்த பா.ம.க.வாக இருந்தது, இந்த முறை டாக்டர் ராமதாஸ் தலைமையில் மற்றொரு அணியாக செயல்படுவது வன்னியர்கள் வாக்குகளை சிதைக்கும் என்றே தெரிகிறது. தனித்து போட்டியிடும் முடிவுடன் டாக்டர் ராமதாஸ் வடமாவட்டங்களில் மட்டும் வேட்பாளர்களை களம் இறக்கினால், அது அ.தி.மு.க. கூட்டணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இடம்பெற்றிருப்பதால், சிறுபான்மையினர் வாக்குகள் கிடைப்பது சந்தேகம் தான். கடந்த தேர்தலில், "தங்களுடைய தோல்விக்கு சிறுபான்மையினர் வாக்கு கிடைக்காமல் போனதுதான் காரணம். பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்ததால் அந்த நிலை ஏற்பட்டது" என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சிலர் கூறினார்கள். அதே நிலை மீண்டும் தொடர்ந்தால், அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்குகள் அதிகம் கிடைப்பது சிக்கல்தான்.

தாக்கத்தை ஏற்படுத்தும் விஜய்

சட்டசபை தேர்தலில் புது வரவான த.வெ.க.வுக்கு முதல் தலைமுறை வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. அந்தக் கட்சியினுடைய இலக்கே 'வீட்டுக்கு ஒரு ஓட்டு' என்பதுதான். அதாவது, தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கார்டுகள் கணக்குப்படி, 2¼ கோடி வாக்குகளை அக்கட்சி குறிவைத்துள்ளது.

மேலும், ஆளுங்கட்சியையும், ஆண்ட கட்சியையும் விரும்பாதவர்கள் த.வெ.க.வுக்கு வாக்களிப்பார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், சிறுபான்மையினர், கிறிஸ்தவ வாக்குகளும் விஜய்-க்கு இந்த முறை கிடைக்கும் என்று தெரிவதால், அவரும் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கூறப்படுகிறது. த.வெ.க.வின் வருகை தி.மு.க. கூட்டணியின் வாக்கு சதவீதத்தையும் சிதைக்கும் என தெரிகிறது.

நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பு?

இதேபோல், கடந்த 2 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, இந்த முறையும் தனித்தே களம் காண்கிறது. தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வந்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் தற்போதைய நிலையில் 7 சதவீதத்திற்கு மேல் உள்ளது.

இது வரும் தேர்தலில் இரட்டை இலக்கத்தை தொடும் என்று அக்கட்சியினர் கூறிவருகின்றனர். என்றாலும், நாம் தமிழர் கட்சிக்கும் முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் இளம் வாக்காளர்களின் ஓட்டுகளே அதிகம் கிடைத்துவருவதால், த.வெ.க.வின் வருகையால் இந்தக் கட்சிக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இழுபறி நிலை நீடிக்கலாம்

மொத்தத்தில், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. இடையேதான் கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது. ஆளப்போகும் கட்சிக்கு மெஜாரிட்டிக்கு தேவையான 118 தொகுதிகள் கூட கிடைக்க முடியாத அளவுக்கு இழுபறி நிலை நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அந்த அளவுக்கு விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று சொல்லப்படுவதால், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிபோல், சட்டசபை தேர்தல் முடிவும் பரபரப்பாகவே அமையும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com