

சென்னை,
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் போலி கதைகளை தொகுப்பு செய்த இன்றைய முதல்-அமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது. இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 சதவீதம் மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், பெண் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம், மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதல்-அமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால சோபா மாடல் ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளா? என்பதை முதல்-அமைச்சர் விளக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார். டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணி கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் நமக்கெதுக்கு வம்பு என்று அமைதியாக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது சோபா மாடல் அரசு! பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி, மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது சி.எம். சார். உண்மை நிச்சயம் வெல்லும்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.