

கோவை,
கோவையில் தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டனியில் இருக்கும் தவெக அரசு கர்நாடக அரசுடன் பேசி சுமுகமாக மேகதாது பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரமுடியும். மற்ற கட்சிகளில் அதிருப்தியடைந்தவர்கள், தங்களுக்கு எதிர்காலம் இல்லை என நினைப்பவர்கள், கட்சிக்குள் பிரச்சினையில் இருப்பவர்களெல்லாம் ஆளுங்கட்சிக்கு செல்வது என்பது வழக்கம். அதுமட்டுமின்றி, யார் ஆட்சிக்கு வந்தாலும், மற்ற கட்சிகளிலிருந்து ஆளுங்கட்சிக்கு செல்வதும் சாதாரணமாகவே இருக்கும்.
தங்களுடைய எம்எல்ஏ-க்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக, தவெக ஆட்சியமைத்த குறைவான காலத்திலேயே, திட்டமிட்டு எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்யவைத்து, அவர்களின் சின்னத்தில் நிற்கவைக்க முயற்சிக்கின்றனர். இது குதிரை பேரம் இல்லாமல் வேறென்ன பேரம்? இந்த அரசு குறைவான அனுபவம் இருந்தாலும், குதிரை பேரத்தில் இவ்வளவு வேகமாக செயல்படுவதை பார்த்தால், இவர்கள் ஜனநாயக ரீதியாகச் செயல்படுகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. திமுகவின் கூட்டணி சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு நொறுங்கி போய்விட்டது.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.