எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும் - டிடிவி தினகரன்

பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.
டிடிவி தினகரன்
Published on

சென்னை,

எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தொடர் மின்வெட்டு

தவெக ஆட்சி அமைத்து 120 நாட்களைக் கடந்தும் தொடரும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி - வீண் விதண்டாவாதப் பேச்சுகளின் மூலம் மக்களை மடைமாற்றுவதை விட்டுவிட்டு, எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்.

தலைநகர் சென்னையில் தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எரிசக்தி துறை

குறிப்பாக, இரவு நேரங்களில் அதிகளவில் ஏற்படும் மின்வெட்டால் பச்சிளம் குழந்தைகள் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருமே தங்களின் தூக்கத்தைத் தொலைத்து, கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தைத் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய துறை சார்ந்த அமைச்சர், மக்களை மடைமாற்றும் விதமாக முடிந்து போன கதைகளையும், காலம் கடந்த குற்றச்சாட்டுகளையும் தோண்டி எடுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி, ஒட்டுமொத்த எரிசக்தி துறையையும் பாழாக்கிக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனைத் தடையின்றி விநியோகிக்க வேண்டிய தவெக அரசு, அதற்கு மாறாக அறிவிக்கப்படாத மின்வெட்டுகளையும், கூடுதல் மின்கட்டணச் சுமையையும் ஏற்படுத்தி, தனது திறனற்ற நிர்வாகத்தை மறைக்க ஏழை, எளிய விளிம்புநிலைப் பொதுமக்களை வாட்டி வதைப்பது ஏற்புடையதல்ல.

வலியுறுத்தல்

எனவே, தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகளைத் தடுத்து நிறுத்துவதோடு, பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என எரிசக்தி துறையையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்துகிறேன்.

X

Daily Thanthi
www.dailythanthi.com