தவெக அரசு கடந்து வந்த 100 நாட்கள்..! - வெற்றி பயணமா..?, வெற்று பயணமா..?

தமிழகத்தில் திராவிட கட்சிகளே மாறி.. மாறி.. ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்தன.
தவெக அரசு கடந்து வந்த 100 நாட்கள்..! - வெற்றி பயணமா..?, வெற்று பயணமா..?
Published on

சென்னை,

தமிழகத்தில் த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று நாளையுடன் (ஆகஸ்டு 17) 100 நாட்கள் ஆகிறது. இத்தனை நாட்கள் கடந்து வந்த பாதை வெற்றிப் பயணமாக அமைந்ததா?, வெற்றுப் பயணமாக இருந்ததா? என்பது தொடர்பான அலசல் இது.

திராவிட கட்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்ட த.வெ.க.

தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு திராவிட கட்சிகளே மாறி.. மாறி.. ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்தன. இருபெரும் திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்கு, அரசியலில் 2½ வயது குழந்தையான த.வெ.க. முட்டுக்கட்டை போட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தமிழக முதல்-அமைச்சராக ஜோசப் விஜய், மே மாதம் 10-ந் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் அன்றைய தினம் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். தொடர்ந்து, மே 21-ந் தேதி நடைபெற்ற 2-வது அமைச்சரவை விரிவாக்கத்தில் 23 பேரும், மே 22-ந் தேதி நடைபெற்ற 3-வது அமைச்சரவை விரிவாக்கத்தில் 2 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அனைவருக்கும் துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

த.வெ.க. அரசின் செயல்பாடு எப்படி?

இந்த நிலையில், தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்று நாளையுடன் (திங்கட்கிழமை) 100 நாட்கள் ஆகிறது. பதவியேற்ற அந்த நாள் (மே 10) முதல் இந்த நாள் (100-வது நாள்) வரை த.வெ.க. அரசின் செயல்பாடு எப்படி? என்பதை பற்றி தொடர்ந்து பார்க்கப்போகிறோம்.

முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்ற மே 10-ந் தேதி 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். "2 மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 2 மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.

பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க, 65 போதைப்பொருட்கள் தடுப்பு படை அமைக்கப்படும்" என்பவைதான் அவை.

717 டாஸ்மாக் கடைகள் அடைப்பு

அதன்பிறகு, குறுகிய நாட்கள் இடைவெளியில், புதிய புதிய அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கின. குறிப்பாக, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே செயல்பட்ட 717 டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். இதன் மூலம் 58 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்ந்தது.

பயிர்க்கடன் தள்ளுபடி

அதன்பின்னர், மாநிலம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீரமைத்து சுவையுடன் கூடிய தரமான உணவுகளை விநியோகம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். தொடர்ந்து, குறு விவசாயிகள் வாங்கிய ரூ.50 ஆயிரம் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய அவர் உத்தரவிட்டார்.

அதன்பிறகு, மே 27-ந் தேதி டெல்லி சென்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். அப்போது, மேகதாது அணை, தமிழக மீனவர் பிரச்சினை உள்பட 4 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் அளித்தார்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம்

ஜூன் 9-ந் தேதி குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கிவைத்தார். அதன்பிறகு, அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அறிவித்தார்.

தொடர்ந்து, கடந்த 5-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், "திருமணமாகும் பெண்களுக்கு திருமண நாளில் அண்ணனின் சீர் என்ற திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப்படவையும் வழங்கப்படும். குடிசை வீடுகளுக்கு பதிலாக 70 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். பிளஸ்-1 மாணவர்களுக்கு ஹெல்மெட், வாட்டர் பாட்டிலுடன் கூடிய நவீன சைக்கிள் வழங்கப்படும். அரசு கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கப்படும்" என்பது உள்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

பட்ஜெட்டில் 125 வாக்குறுதிகள்

பட்ஜெட் தொடர்பாக கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் மரிய வில்சன், "த.வெ.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் 125 பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது" என்றார்.

இதற்கு மத்தியில், சத்தம் இல்லாமல் ஒரு சாதனையை தமிழக தொழில் துறை செய்துள்ளது. அதாவது, 100 நாட்களில் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 788 பேர் வேலைவாய்ப்பை பெறும் வகையில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 514 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளது.

தொழில் முதலீடுகள் ஈர்ப்பு

குறிப்பாக, கடந்த 13-ந் தேதி நடைபெற்ற, வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் மட்டும் போடப்பட்ட 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.67,452 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 998 பேருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்க உள்ளன. அதுவும், தொழில் முதலீடுகள் அனைத்தும் ஒரே பகுதியில் குவிந்துவிடாமல், 23 மாவட்டங்களுக்கு பரவலாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக தொழில் நிறுவனம் அமைய இருக்கிறது.

முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்

இப்படி, சத்தம் இல்லாமல் தொழில் புரட்சியை த.வெ.க. அரசு ஏற்படுத்தினாலும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, மின் தடை பிரச்சினை, குப்பைகள் சரியாக அகற்றப்படாதது உள்ளிட்டவை புதிய அரசின் மீது குற்றச்சாட்டுகளாக வைக்கப்படுகின்றன.

கடந்த கால ஆட்சிகளில், தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தால், அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும். அல்லது அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தால் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும். ஆனால், இப்போது புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க.வுக்கு தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு திராவிட கட்சிகள் எதிர்க்கட்சிகளாக உள்ளன.

100 நாள் ஆட்சி எப்படி?

இதனால், சட்டசபையில் இரு எதிர் கட்சிகளின் கேள்விக் கணைகளை த.வெ.க. அமைச்சர்கள் சமாளிக்க வேண்டியுள்ளது. எதிரில் இருப்பவர்கள் சட்டசபை அனுபவத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்றாலும், ஆளும் தரப்பினரும் அதைவொரு சவாலாக ஏற்று சமாளித்து வருகின்றனர்.

மொத்தத்தில், கடந்த 100 நாள் த.வெ.க. ஆட்சி, ஊழலுக்கு எதிராக தனது பார்வையை கழுகுப்பார்வையாக அதிகரித்துள்ளதுடன், ஒவ்வொரு தடைகளையும் தாண்டி வெற்றி பெற்று வருவதாகவே தெரிகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com