பைக் விபத்தில் அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர் பலி

தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 2 பேர் ஒரு பைக்கில் புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் சாலையில் சென்றபோது, பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றது.
பைக் விபத்தில் ஒப்பந்த ஊழியர் பலி
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பைக் மீது வாகனம் மோதிய விபத்தில் அனல் மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள்

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை யாதவர் தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் முத்தமிழரசன் (வயது 18). அதே பகுதியைச் சேர்ந்த பூவலிங்கம் மகன் மாரிக்கண்ணன்(18). இவர்கள் 2 பேரும் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தனர்.

பைக் மீது வாகனம் மோதி விபத்து

இன்று காலையில் பணிக்கு செல்வதற்காக முத்தமிழரசன் பைக்கை ஓட்ட, மாரிக்கண்ணன் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் சாலையில் உள்ள திருச்செந்தூர் ரோடு ரவுண்டானா அருகே சென்றபோது, இவர்களின் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றது.

ஒப்பந்த ஊழியர் பலி

இந்த விபத்தில் முத்தமிழரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாரிக்கண்ணன் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற முத்தையாபுரம் காவல் நிலையப் போலீசார், பாதிக்கப்பட்ட 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த முத்தமிழரசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டறிய அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com