

திருவள்ளூர்,
சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயது தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு தனது முதல் மனைவியின் 16 வயது மகளையும், 2-வது மனைவியின் 13 வயது மகளையும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆவடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் திருவள்ளூர் போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட போக்சோ கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி உமாமகேஸ்வரி, தனது சொந்த மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1.64 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளுக்கும் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அரசால் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, ஆவடி அனைத்து மகளிர் போலீசார் குற்றவாளியை மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.