திருவண்ணாமலை; காணாமல் போன 3 சிறுமிகள் சென்னையில் மீட்பு

உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் வீடுகளில் தேடியும், அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை
Published on: 

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் காணாமல் போன 3 சிறுமிகளை போலீசார் மீட்டுள்ளனர்.

சிறுமி மாயம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த வடிவேலு-பவானி தம்பதியினரின் 2-வது மகள் ஹேமலதா என்கிற ஹேமாவதி (வயது 7). இவள் கடந்த 11-ந்தேதி தன்னுடைய பிறந்த நாள் விழாவை கொண்டாடி விட்டு பெற்றோருடன் படுத்து தூங்கினாள். மறுநாள் அதிகாலை 5.30 மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது ஹேமலதாவை காணவில்லை. பல்வேறு இடங்களில் பெற்றோர், உறவினர்கள் தேடிப்பார்த்தும் சிறுமி கிடைக்கவில்லை.

வழக்குப்பதிவு

இதுகுறித்து சிறுமியின் தாய் பவானி கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிறுமியை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. இருப்பினும் சிறுமியை பற்றிய எந்தவொரு தடயமும் சிக்காததால் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

துப்பு துலங்கவில்லை

சிறுமி காணாமல் போய் இன்றுடன் 17 நாட்கள் ஆகும் நிலையில் அவளை பற்றிய எந்தவொரு துப்பும் துலங்காததால் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் தாய், தந்தை, பாட்டி மற்றும் உறவினர்களிடம் தனித்தனியாக துருவி, துருவி விசாரணை நடத்தினர். செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கில், தற்போது ஆர்காம்பூண்டி எனும் பகுதியில் வீட்டில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

3 சிறுமிகள் மாயம்

இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவமாக திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் 3 பள்ளி சிறுமிகளை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் கேரளாவில் கூலி வேலை செய்து வரும் நிலையில், நேற்று பள்ளி சென்ற 2 சகோதரிகள் மற்றும் 1 உறவுக்கார சிறுமி என மொத்தம் 3 மாணவிகள் (8,9,10 ஆம் வகுப்பு) வீடு திரும்பவில்லை என தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

மீட்பு

அதில், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தராப்பட்டு கிராமத்தில் பஜனை கோவில் தெருவில் வாடகை வீட்டில் அசோக் குமார் மற்றும் ஜோதி தம்பதிகள் வசித்து வருகின்றனர். அவர்களுடைய 2 மகள்கள் மற்றும் உறவுக்கார சிறுமி ஒருவர் என 3 சிறுமிகள் அருகேயுள்ள பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில், பள்ளிக்கு சென்ற அவர்களை காணவில்லை.

இதனை தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் வீடுகளில் தேடியும், அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிந்து, சிறுமிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், அவர்கள் 3 பேரும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com