

திருவண்ணாமலை,
சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு இன்று முதல் நாளை மறுநாள் (2-ந் தேதி) வரை 3 நாட்கள் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொது மக்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக திருவண்ணாமலையில் அமைக்கப்பட்ட 9 தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதை வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மற்றும் திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பஸ்கள் கால நேர அட்டவணைப்படி இல்லாமல் தொடர்ச்சியாக இயக்க அனுதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 100 கல்வி நிறுவன பஸ்கள் கட்டணமில்லாமல் இயக்கப்படுகிறது. 100 மினி பஸ்கள் ரூ.10 பயணக் கட்டணத்தில் இயக்கப்படுகிறது. சித்ரா பவுர்ணமியன்று இனாம்காரியந்தல் மற்றும் செங்கம் சுங்கச்சாவடிகளில் கட்டணமில்லா பஸ்கள், வழித்தட பஸ்கள் மற்றும் மினி பஸ்களுக்கு சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதோடு, இவ்வாகனங்கள் தனிப் பாதையில் பயணிக்க அனுமதிக்கப்படும்.
அன்று கியூ.ஆர். கோடு ஒட்டப்பட்ட ஆட்டோக்கள் மட்டும் இயக்க அனுமதிக்கப்படும். வாகனங்களின் இயக்கங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 30 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் 20 போக்குவரத்து துறை பணியாளர்கள் மாற்றுப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர் என கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்து உள்ளார்.