திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா... அன்னதானம் வழங்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் கிரிவலப்பாதையில் இருந்து 100 மீட்டர் உட்புறம் அன்னதானம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்
திருவண்ணாமலை அருணாசலேஸ்சவரர் கோவில்
Published on: 

திருவண்ணாமலை,

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்க விரும்புவோர் வருகிற 21-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் செய்தி

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி அன்னதானம் வழங்குவதற்கான நடைமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம், நீர் மோர் மற்றும் பிற உணவுப் பொருட்கள் வழங்க உத்தேசிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.foscos.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ரூ.100 கட்டணம் செலுத்தி பதிவு செய்து, அனுமதி சான்றிதழ் பெற்று, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும்.

மேலும் திருவண்ணாமலை செங்கம் சாலை பழைய அரசு மருத்துவமனையில் இயங்கும் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் வருகிற 21-ந் தேதி முதல் வருகிற நவம்பர் மாதம் 11-ந் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அளித்து அனுமதி பெற வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே...

பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முகவரிக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்று நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் தங்கள் சார்ந்தவர்களின் விவரத்தினை ஆதார் அட்டை நகலுடன் சமர்ப்பிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே அன்னதானம் அளிக்க வேண்டும்.

அனுமதி அளிக்கப்பட்ட நாள், நேரத்தில் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கக்கூடாது. பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் கிரிவலப்பாதையில் இருந்து 100 மீட்டர் உட்புறம் அன்னதானம் வழங்க வேண்டும்.

உணவு பொட்டலங்கள் வழங்கக் கூடாது

நோய்தொற்று உள்ளவர்களை அன்னதானம் சமைக்கவோ மற்றும் வழங்கவோ அனுமதிக்க கூடாது. அன்னதானம் வழங்குவதற்கு அல்லது வேறு உணவுப் பொருட்களை வழங்குவதற்கு வாழை இலை, பாக்குமட்டை அல்லது தொன்னையில் வழங்க வேண்டும். பொட்டலமிட்ட உணவினை அன்னதானம் வழங்கக்கூடாது. உணவு பொருட்கள் தரமானதாகவும், தூய்மையாகவும் மற்றும் கலப்படம் இல்லாமலும் இருக்க வேண்டும்.

பக்தர்களுக்கு வழங்கும் உணவுப் பொருட்களில் செயற்கை நிறமிகள் பயன்படுத்தக்கூடாது. உணவு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் வாங்கும்போது அவற்றின் தயாரிப்பு. காலாவதி தேதியை சரிபார்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு அன்னதானம் வழங்க கூடாது. உணவு கழிவு பொருட்களை போடுவதற்கு ஏதுவாக குப்பை தொட்டிகளை ஏற்பாடு செய்து அன்னதானம் அளிப்பவர்களே உணவு கழிவுகளை சேகரித்து அகற்ற வேண்டும்.

வாட்ஸ்-அப் எண்

அன்னதானம் வழங்கும் இடத்தை சுத்தம் செய்துவிட்டு செல்லவேண்டும். வாகனங்களில் அன்னதானம் வழங்க கூடாது. உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் பதிவு செய்யலாம். போதிய வழிகாட்டு முறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com