

தூத்துக்குடி,
தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகங்களில், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் (EVM) வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட கலெக்டர் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. பெல் (BEL) நிறுவனப் பொறியாளர்கள் மூலம் VVPAT எந்திரங்களில் குறியீடு ஏற்றுதல் மற்றும் Control Unit (CU)-ல் வேட்பாளர் தரவுகளைப் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒதுக்கப்படும் எந்திரங்களின் எண்கள் (CU, BU, VVPAT numbers) இறுதி செய்யப்பட்டு, தேர்தல் ஆணைய விதிப்படி சீலிடப்படுகின்றன. ஏதேனும் எந்திரத்தில் குறைபாடு கண்டறியப்பட்டால், அவை உடனடியாக மாற்றப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்படும்.
வாக்காளர்களின் வசதிக்காக இந்த முறை பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மின்சாரம், குடிநீர், கழிப்பறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிக்குள் கைபேசிகளுக்கு அனுமதி இல்லாததால், இந்த முறை புதிய வசதியாக டோக்கன் (Token) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் கைபேசிகளை வெளியே ஒப்படைத்துவிட்டு, வாக்களித்த பின் பெற்றுக் கொள்ளலாம்.
பாகம் எண் (Part No) மற்றும் வரிசை எண் தெரியாதவர்களுக்கு உதவ, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம் 'Booth Facilitation Desk' அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர், மாவட்ட எஸ்.பி. மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் தலைமையில் பாதுகாப்புத் திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா, கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.