தூத்துக்குடி: சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் கடனுதவி- கலெக்டர் இளம்பகவத் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் மக்கள் கடனுதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்.
தூத்துக்குடி: சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் கடனுதவி- கலெக்டர் இளம்பகவத் தகவல்
Published on

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களான சிறு தொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் (ம) வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் 1-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம/நகர்ப்புறங்களில் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் திட்டம் 2-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம/நகர்ப்புறங்களில் ரூ.8 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருக்க வேண்டும்.

திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 10% பெண்களுக்கு 8% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மை மாணவ மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை/முதுகலை தொழிற்கல்வி/தொழில் நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகப்பட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3% வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30 லட்சம் வரையிலும் கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது.

மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விராசாத் கடன் (கைவினை கலைஞர் கடன் திட்டம்) கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்களான உபகரணங்கள்/கருவிகள்/இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது. எனவே சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை அதிக அளவில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் மக்கள் கடன் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்/மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட/மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்களில் பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்கடன், விராசாத் (கைவினை கலைஞர் கடன் திட்டம்) திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது கடன் மனுக்களுடன் சிறுபான்மையினர் மதச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, திட்ட அறிக்கை, கூட்டுறவு வங்கி கோரும் தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது சிறுபான்மையினர் மதச்சான்றிழ்/சாதிச் சான்றிதழ்/வருமான சான்றிதழ்/இருப்பிட சான்றிதழ் நகல், குடும்ப அட்டை/வாழ்விட சான்று, ஆதார் நகல், பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate), கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது அசல் (Original), மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com