ஊத்தங்கரை தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம்: 3 பேர் கைது

இளையராஜாவும் அவரது குடும்பத்தினரும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று திருநாவுக்கரசு மிரட்டியுள்ளார்
ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உறுப்பினரான என்.இளையராஜா
Published on

சென்னை,

தமிழக வெற்றி கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உறுப்பினரான என்.இளையராஜா சில தினங்களுக்கு முன்பு கைபேசியில் தொடர்பு கொண்ட திருநாவுக்கரசு என்ற நபர், தான் இந்திய அரசியல் ஜனநாயக உத்திகள் (IPDS) என்ற கருத்து கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், ஒரு முக்கிய கட்சியை சேர்ந்த சிலர் கேட்டு கொண்டதன்பேரில் தொடர்பு கொள்வதாகவும், நேரில் சந்திக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். ஆனால், தான் வேறு பணியில் இருப்பதாக கூறி இளையராஜா தொடர்பை துண்டித்துள்ளார்.

ரூ.35 கோடி பேரம்

ஆனால், மீண்டும் தொடர்பு கொண்ட மேற்படி திருநாவுக்கரசு, இளையராஜாவிடம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும், ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும் அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது தாங்கள் நடந்துகொள்ள வேண்டும் என்றும், அதற்கு சன்மானமாக ரூ.35 கோடி வரை தருவதாகவும் ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளையராஜா எனக்கு விருப்பமில்லை. இனிமேல் என்னிடம் பேசாதீர்கள் என்று கண்டிப்புடன் கூறியபோது. தான் பேசியது குறித்து வெளியே தெரிவித்தால் இளையராஜாவும் அவரது குடும்பத்தினரும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று திருநாவுக்கரசு மிரட்டியுள்ளார்.

3 பேர் கைது

இதனால் சட்டமன்ற உறுப்பினர் என்.இளையராஜா 29.06.2026 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது ஊழியரான தன்னிடம் தனது மக்கள் பணியை செய்யக் கூடாது என்பதற்காகவும், தனது பேச்சுக்கு உடன்பட லஞ்சம் தர முயற்சித்ததோடு. தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு பின்புலமாக செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.

அப்புகாரின்பேரில், டி1( D1) திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புலன் விசாரணையின் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு பின்னணியாக செயல்பட்ட திருச்சியை சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை

மேலும் புலன் விசாரணையில் திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜியின் சகோதரர் வி.அசோக்குமார் என்பவர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட எதிரி நரேஷை சென்னையில் சந்தித்ததும், வி. செந்தில்பாலாஜி மற்றும் வி.அசோக்குமார் ஆகியோரின் அறிவுரையின் பேரிலேயே எதிரி திருநாவுக்கரசு வழக்கின் புகார்தாரரான சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை தொடர்பு கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. மேலும் இவ்வழக்கில் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com