கர்நாடக கோவிலில் நந்தி சிலைகளை திருடிவிட்டு தமிழகத்திற்கு தப்பி வந்த 3 வாலிபர்கள் - ஈரோட்டில் கைது

வெண்கல நந்தி சிலைகளைத் திருடியதாக, கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உள்பட 3 பேர் ஈரோட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக கோவிலில் நந்தி சிலைகளை திருடிவிட்டு தமிழகத்திற்கு தப்பி வந்த 3 வாலிபர்கள் - ஈரோட்டில் கைது
Published on

ஈரோடு,

பர்கூர் வனப்பகுதி வழியாக சென்றுகொண்டிருந்த வாகனங்களை ​​வனத்துறையினர் தடுத்து நிறுத்தி வழக்கமான விசாரணைகளை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தில் 2 வெண்கல சிலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த சிலைகள் குறித்து முறையான விளக்கம் அளிக்கப்படாததால், வனத்துறையினர் வாகனத்தில் இருந்த மூவரையும் பிடித்து ஈரோடு மாவட்ட காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 2 வெண்கல நந்தி சிலைகளும் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலில் இருந்து திருடப்பட்டது தெரியவந்தது. சிலையை திருடிவிட்டு தமிழகத்திற்கு தப்பி வந்தபோது மூவரும் மாட்டிக் கொண்டனர்.

இதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் (32), ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த தேவராஜ் (23) மற்றும் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரிஸ்வான் (19) ஆகிய மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட 2 வெண்கல சிலைகளும் பல நூற்றாண்டுகள் பழமையானவை எனக் கருதப்படுகிறது. அந்த சிலைகள் தொன்மையானவையா என்பதை உறுதிப்படுத்த, நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com