திருப்பதி நெய் கலப்பட ஊழல் வழக்கு: திண்டுக்கல் டெய்ரி நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை

திருப்பதி லட்டு கலப்பட வழக்கு தொடர்பாக திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் ஏ.ஆர். டெய்ரி புட்ஸ் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளரின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருப்பதி நெய் கலப்பட ஊழல் வழக்கு: திண்டுக்கல் டெய்ரி நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்து செல்வார்கள். இவ்வாறு தரிசனத்துக்காக வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்த லட்டு பிரசாதமும் உலக புகழ்பெற்றது ஆகும். கோவிலுக்கு வரும் பக்தர்கள், பிரசாதமாக லட்டுகளை வாங்கி செல்வதுடன் அவற்றை தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள்.

பரபரப்பு குற்றச்சாட்டு

இந்த நிலையில் திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் சேர்க்கப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பை முந்தைய ஜெகன் மோகன் அரசு கலந்ததாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுப்பு தெரிவித்து வந்தது. இந்த சூழ்நிலையில் திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. ஆய்வில் இந்த தகவல் வெளியாகி நாடு முழுவதும் பக்தர்களை அதிர்ச்சியடைய செய்தது. இதையடுத்து நெய் சப்ளை செய்த நிறுவனங்கள் அனுப்பிய நெய் டின்களில் மாதிரி குஜராத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது

அமலாக்கத்துறை சோதனை

திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலையில் பிள்ளையார்நத்தம் பிரிவில் உள்ள ஏ.ஆர். டெய்ரி புட்ஸ் நிறுவனத்தின் நெய்யில் 20 சதவீதம் மட்டுமே தரம் இருந்ததாகவும். அதில் சோயா பீன்சில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டிப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்ததாக கூறப்பட்டது.இதையடுத்து அந்த நிறுவனத்தை கருப்பு பட்டியலில் திருப்பதி கோயில் தேவஸ்தானம் சேர்த்துவிட்டு, வேறு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து நெய் கொள்முதல் செய்யப்படுகிறது.

12 க்கும் மேற்பட்ட இடங்கள்

இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏ ஆர் டெய்ரி புட் நிறுவனத்திற்கு கடந்த ஒரு ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள் ஆந்திரா அரசும் தமிழக அரசும் செய்திருந்தது இந்த நிலையில் நேற்று காலை இந்த நிறுவனம் அமைந்துள்ள திண்டுக்கல் மதுரை ரோடு மற்றும் அதன் உரிமையாளர் ராஜசேகர் வீடு அமைந்துள்ள பிள்ளையார்நத்தம் வீடு ஆகிய இரண்டு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 12க்கும் மேற்பட்டோர் நான்கு கார்களில் வந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் இன்று மாலை 5 மணி அளவில் ஏ.ஆர். புட்ஸ் நிறுவனத்தில் சோதனை முடிந்து அதிகாரிகள் வெளியில் சென்றனர்

X

Daily Thanthi
www.dailythanthi.com