டீசல் கேன் சரிந்து விழுந்ததால் சோகம்: கார்த்திகை தீப தீயில் கருகி தந்தை-மகள் பலி

சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர், வீட்டில் வைத்திருந்த டீசல் கேன் தவறி விழுந்து, டீசல் கார்த்திகை தீப விளக்கில் பட்டதால் வீட்டில தீ பரவி விபத்து ஏற்பட்டது.
தீவிபத்தில் பலியான அறிவழகன்.
Published on: 

சென்னை,

சென்னை மாதவரம் அருகே கார்த்திகை தீப விளக்கில் டீசல் வடிந்து வீடு தீப்பிடித்து எரிந்ததில் தந்தை-மகள் உடல் கருகி பலியானார்கள்.

கார்த்திகை தீப விளக்கு

சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு கணபதி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது 45). லாரி டிரைவரான இவரது மகள் தன்ஷிகா (வயது 15). இவரது வீடு குறுகிய சந்தில் அமைந்துள்ளது. நேற்று இரவு வீட்டு வாசலில் கார்த்திகை தீப விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. அறிவழகன், தனது லாரியில் ஊற்றுவதற்காக வீட்டில் கேனில் டீசல் வாங்கி வைத்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டீசல் கேன் தவறி கீழே விழுந்தது. அதில் இருந்து வெளியேறிய டீசல், வாசல் வழியாக வழிந்து, அங்கு எரிந்து கொண்டிருந்த கார்த்திகை தீப விளக்கில்பட்டது.

தீவிபத்தில் தந்தை-மகள் பலி

இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. வீட்டுக்குள் இருந்த அறிவழகன், அவரது மனைவி அனுஷியா மற்றும் 1½ வயது குழந்தை ஆகிய 3 பேரும் தீயில் சிக்கிக்கொண்டனர். இதில் அவரது மனைவி மட்டும் அதிர்ஷ்டவசமாக வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பினார். ஆனால், வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட அறிவழகனும், அவரது மகள் தன்ஷிகாவும் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணும் தீக்காயம் அடைந்தார்.

புகை மண்டலமானது

வீடு முழுவதும் தீ பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சிய ளித்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

தீயில் கருகி உயிரிழந்த தந்தை-மகள் உடல்களை மீட்ட மாதவரம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீயில் காயம் அடைந்த செல்வி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X