

செங்குன்றம்,
சென்னை கொடுங்கையூரில் சாலையை கடக்க முயன்ற ஓட்டல் தொழிலாளி மீது அரசு பஸ் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை கொடுங்கையூர் கட்டபொம்மன் 9-வது தெருவை சேர்ந்தவர் குமார் (47). இவர் தனியார் ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு வந்த குமார், சாலையை கடக்க முயன்றார். அப்போது தாம்பரத்தில் இருந்து மாதவரம் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குமார், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கு காரணமான அரசு பஸ் டிரைவர் தீனதயாளன், கண்டக்டர் சுரேஷ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த குமாருக்கு திலகவதி என்ற மனைவியும், 24 மற்றும் 20 வயதில் 2 மகள்களும் உள்ளனர்.