தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் தவெக அரசு: மு.வீரபாண்டியன் வரவேற்பு

தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் 6 சிலிண்டர்களை வழங்கிட வேண்டும்.
மு.வீரபாண்டியன்
Published on

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

விமான போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு புதிய கூடுதலான விமான நிலையம் ஒன்றை சென்னையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. அதற்கான முறையில் பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக நிலமும் கையகப்படுத்தப்பட்டன. ஆனால், இத்திட்டத்தை எதிர்த்து அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து போராடி வந்தனர். இத்திட்டதால் விவசாய நிலங்கள் நீர் நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர் .

110 விதி

இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது, புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என தவெக தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் முதல்-அமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளது வரவேற்பிற்குரியது. புதிய விமான நிலையத்தை அதிக அளவில் சுற்றுச்சூழலுக்கும் விவசாய நிலங்களுக்கும், குடியிருப்புகளுக்கும் பாதிப்பில்லாமல் உருவாக்கிட தகுந்த இடத்தை உடனடியாக தமிழ்நாடு அரசு தேர்வு செய்ய வேண்டும் . விமான நிலையம் அமைக்கும் பணியை துரிதப் படுத்திட வேண்டும் .

6 சமையல் எரிவாயு சிலிண்டர்

ஆண்டு தோறும் 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தவெக தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தற்பொழுது முதற்கட்டமாக ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சம் வரை வருமானம் உள்ள குடும்பங்களுக்கு வரும் பொங்கல் நாளிலிருந்து மூன்று சிலிண்டருக்கான பணம் வங்கியில் செலுத்தப்படும் என அறிவித்துள்ளது வரவேற்பிற்குரியது. இருப்பினும் தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் 6 சிலிண்டர்களை வழங்கிட வேண்டும். ஆண்டு குடும்ப வருமானம் ரூ 5 லட்சம் வரை உள்ள குடும்பங்களுக்கும் இத்திட்டத்தின் பயன் கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

வெற்றிப் பயணத் திட்டம்

தேர்தல் வாக்குறுதிபடி, மகளிர் கட்டணமில்லா பயண திட்டம் வரும் அக்.2 முதல், விரிவாக்கம் செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி, எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம். மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள, புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும், கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளார். “இத்திட்டத்தில் பயன்பெற, வருமான உச்சவரம்போ, பயண எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளோ இல்லை, ‘வெற்றிப் பயணத் திட்டம்’, இதர சேவைகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்” என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com