ஏய்த்துப் பிழைக்கும் தொழிலை கடந்த 4 மாதங்களாக கனகச்சிதமாக செய்யும் த.வெ.க. அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, விவசாயிகளை ஏமாற்றிய அரசு என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஏய்த்துப் பிழைக்கும் தொழிலை கடந்த 4 மாதங்களாக கனகச்சிதமாக செய்யும் த.வெ.க. அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
Published on

சென்னை,

விஜய் தலைமையிலான த.வெ.க. கூட்டணி அரசு சொல் ஒன்று, செயல் வேறு என்ற ரீதியில் அனைத்துத் தரப்பு மக்களையும் வஞ்சித்து வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அனுபவமின்மை

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் சீர்குலைந்துபோன சட்டம்-ஒழுங்கினை சீர்செய்வோம் என்று மார்தட்டிப் பேசிவிட்டு, தறிகெட்டு ஓடும் குதிரையைப் போல், குற்றச் சம்பவங்கள் மேலும் மேலும் பெருகி வரும் நிலையில், செய்வதறியாது திகைத்து நிற்கும் இந்த பொய்க்கால் அரசு, ஆட்சி இயந்திரத்தை முறையாக சுழற்றத் தெரியாமல், அனுபவமின்மை காரணமாக கை பிசைந்து நிற்கும் இந்த அரசுக்கு, சொல் புத்தியும் இல்லை; சுய புத்தியும் இல்லை என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.

த.வெ.க. அமைச்சர்கள்

காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை உரிய நேரத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், கொள்முதல் செய்யாததால் அவைகள் முளைவிட்டு பாழாகி, பாடுபட்டு உழைத்த விவசாயிகளின் உழைப்பு வீணாகிறது என்று கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் விரிவாக நான் எடுத்து வைத்தேன்.

வெட்ட வெளியில் மழை வெள்ளத்தால் நெல்மணிகள் முளைத்து வீணாய் போனதையும், அதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்த அரசை வலியுறுத்தினேன். அந்த நேரத்தில், குறைகளைச் சொல்லும் சட்டமன்ற உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் நோக்கில் த.வெ.க. அமைச்சர்கள் பதில்களை சொன்னார்களே தவிர, வீணாய் போகும் நெல்மணிகளை பாதுகாப்பதற்கு முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்கு நஷ்டம்

கடந்த சில நாட்களாக திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த திடீர் மழையினால், சுமார் 2,000 ஏக்கர் நிலத்தில் விளைவித்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர்-மானம்பாடி, நல்லிச்சேரி மற்றும் பல பகுதிகள், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மற்றும் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் முழுமையாக கொள்முதல் செய்யப்படாமல் சாலை ஓரங்களில் குவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையில் நனைந்து வீணாகி, விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

நெல்மணிகள்

வானத்தை வில்லாய் வளைப்போம், விண்மீன்களை பூமிக்கு கொண்டு வந்து மக்களுக்கு வெளிச்சம் தருவோம் என்பதுபோல், முடியாத அனைத்தையும் செய்து காட்டுவோம் என்று வாய்ப்பந்தல் போடுவதை இந்த அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏழை, எளிய மக்களின் வயிற்றுப் பசியை போக்குவது நியாய விலைக் கடைகளில் விலையில்லாமல் வழங்கப்படும் அரிசிதான்.

அந்த அரிசியின் ஆதாரமாக திகழக்கூடிய நெல்மணிகள் வீணாய் போவதை வேடிக்கை பார்க்கும் இந்த அரசின் போக்கை ஏற்க முடியாது. மக்களின் வயிற்றுப் பசியோடு விளையாடும் போக்கை உடனடியாக கைவிட்டு, விவசாயிகள் விளைவித்த நெல்மணிகளை முழுமையாக கொள்முதல் செய்து, விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டுமென்று விளையாட்டு மாடல் த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com