

சென்னை,
அனைத்தையும் மூடி மறைக்கும் பொம்மை அரசாக விஜய் அரசு செயல்பட்டு கொண்டிருப்பதாக தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான இ.பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்படுள்ள அறிக்கையில் கூறியிறுப்பதாவது:-
த.வெ.க ஆட்சியில் 8 பட்டியலின அமைச்சர்கள் இருந்தும், ஒரு தலித் மாணவர் தன் ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர முடியாமல் பரிதவிக்கும் பரிதாபகரமான நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். ஏழை எளிய பட்டியல் சமூக மாணவர்கள் அயல்நாடுகள் சென்று உயர்கல்வி பயில பொருளாதாரம் எந்தவிதத்திலும் தடையாக இருக்க கூடாது என்ற உயரிய நோக்கத்தோடு அன்றைய முதல்-அமைச்சர் எங்களின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்த திட்டம்தான் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம்!
அந்த திட்டத்தில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி படித்து வரும் மாணவர்களுக்கு நிதியுதவியை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது தவெக அரசு. தகுதிவாய்ந்த SC, ST மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் முதுகலை, பிஎச்.டி மற்றும் முதுமுனைவர் (Post Doctoral) ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் முழு நிதியுதவித் வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்களின் குடும்ப வருமான அடிப்படையில் கல்விக் கட்டணம், வாழ்க்கைச் செலவினம் உட்பட ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.36 லட்சம் வரை முழு நிதியுதவி வழங்கப்படுகிறது. அதோடு விசா, விமானப் பயணக் கட்டணம், மருத்துவக் காப்பீடு போன்ற இதர செலவுகளும் இந்த திட்டத்தில் ஏற்கப்படுகின்றன. வெளிநாடு சென்று உயர் கல்வி பயிலத் திட்டமிடும் மாணவர்களுக்கு, விசா மற்றும் தகுதித் தேர்வுகளுக்கான பயிற்சிகளும் நான் முதல்வன் திட்டம் மூலமாக விலையில்லாமல் வழங்கப்பட்டன.
கழகத் தவைர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் எந்த தொய்வும் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த இந்த திட்டம், தவெக ஆட்சியில் நிதி தாமதத்தால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மலேசியாவில் உள்ள மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் திசுப் பொறியியல் மற்றும் மீளுருவாக்கம் மருத்துவத் துறையில் 2-ஆம் ஆண்டு பிஎச்.டி பயிலும் மதுரையைச் சேர்ந்த பாரதிதாசன் என்ற ஆராய்ச்சி மாணவர் நிதி தாமதம் தொடர்பாக வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் 2023-ல் மலேசியா சென்ற பாரதிதாசன் முதலாம் ஆண்டிற்கான (2024) கட்டணங்களை அரசு வழங்கியதாகவும் ஆனால், இரண்டாம் ஆண்டிற்கான (2025-2026) கல்விக்கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவிற்கான நிதி வரவில்லை என சொல்லியிருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் வர வேண்டிய நிதி 5 மாதங்களாக வரவில்லை என்று வேதனை தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பாரதிதாசன் அமைச்சருக்கும், செயலாளருக்கும் 12 முறை மின்னஞ்சல்கள் அனுப்பியும் அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. நிதி கிடைக்காததால் மருத்துவ ஆராய்ச்சி பாதிக்கப்பட்டு நண்பர்களிடம் கடன் வாங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார். மின்னஞ்சல் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத அரசு, பாரதிதாசன் வெளியிட்டிருக்கும் வீடியோ வைரல் ஆன நிலையில் தவறை மறைக்க, அவர் செலவின ஆவணங்களை முறைப்படி சமர்ப்பிக்கவில்லை என பொய்யான காரணங்களை இப்போது முன் வைக்கிறது.
இது தொடர்பாக இத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை த.வெ.க அரசின் தவறை மறைக்கும் முயற்சியாகவே தெரிகிறது. அமைச்சர் வெளியிட்ட அறிக்கையிலே பாரதிதாசனுக்கு நிதி வழங்கப்பட்ட தேதிகளை குறிப்பிட்டிருக்கிறார். அந்த தேதிகள் அத்தனையும் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டவை. அவரே உண்மையை போட்டு உடைத்துவிட்டார். தி.மு.க. ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு த.வெ.க. ஆட்சியில் கிடைக்காமல் போனது ஏன்?
பாரதிதாசன் ஏப்ரல் மாதமே ஆவணங்களை அனுப்பியிருக்கிறார். மின்னஞ்சல் மூலமும் நினைவூட்டியிருக்கிறார். அவருடைய பெற்றோர் அமைச்சரை நேரிலும் சந்தித்து சொல்லியிருக்கிறார்கள். இவை எதன் மீதும் நடவடிக்கை இல்லை என்பதால்தான் மன உளைச்சலில் பாரதிதாசன் வீடியோ வெளியிட்டார். அவர் தேதி வாரியாக அரசிடம் முன் வைத்த கோரிக்கையையும் ரசீது ஆவணங்களையும் வெளியிட்டுள்ள நிலையில் த.வெ.க. அரசு தனது முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக்கொள்ளப் போகிறது?
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகத் தொடங்கப்பட்ட இயக்கமான விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு பொறுப்பு வகிக்கும் துறையில், பட்டியல் இன மாணவரின் அயலக உயர்கல்விக் கனவு சிதைக்கப்படுவது வேதனையின் உச்சம். சமூக நீதித்துறை அமைச்சருக்கு இந்த ஆட்சியில் கொஞ்சமாவது அதிகாரம் இருக்கிறதா? அல்லது சூப்பர் பவராக இயங்குபவர்கள்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார்களா?
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் மிக முக்கியமான இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள், தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த உதவித்தொகைக்கான ஆவணங்களை அதிகாரப்பூர்வ நிதி ஆதாரமாக ஏற்றுக்கொள்ள மறுப்பதால் இந்த ஆண்டு வெளிநாடு செல்லவிருக்கும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி குறித்த எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த ஆண்டு பிரிட்டனில் படிக்க விண்ணப்பித்த 316 மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த சிக்கலைத் தீர்க்க, உடனடியாக பிரிட்டன் தூதரகத்துடனும், இங்கிலாந்து அரசுடனும் பேசக் கோரி தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் - நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு அவசரக் கடிதம் எழுதியிருக்கிறார்.
எதிர்க் கட்சியாக இருந்தாலும் தி.மு.க., ஒன்றிய அரசிடமும் சம்மந்தப்பட்ட தூதரக அதிகாரிகளிடமும் கடிதங்கள் எழுதி குரல் கொடுத்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஒன்றிய அரசிடம் இதுபற்றி பேசியதா? ஒன்றிய அரசுக்கு இதுதொடர்பாக சமூகநீதித் துறை அமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறாரா? விஜய் வாய் திறக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன? அனைத்தையும் மூடி மறைக்கும் பொம்மை அரசாக செயல்பட்டு கொண்டிருக்கிறது விஜய் அரசு.
சட்டமன்றத்தில் இந்த பிரச்னையை தி.மு.க. உறுப்பினர் கோவி.செழியன் எழுப்பிய போது அதே பொய்யை சொல்லியிருக்கிறார் அமைச்சர் வன்னி அரசு. பிரச்னையை தீர்ப்பதற்கு பதில், பழி தீர்க்கும் நோக்கம் மட்டுமே அவருடைய உரையில் வெளிப்பட்டிருக்கிறது.
பட்டியல் இனத்தவர்களின் உயர்கல்விக்காக சிறந்த நோக்கத்துடன் திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவது போலவே விஜய் தலைமையிலான த.வெ.க அரசின் நடவடிக்கைகள் இருக்கின்றன. இந்திய அளவில் ஒன்றிய பா.ஜ.க அரசு பட்டியல் இன மாணவர்களுக்கான கல்வி நிதியுதவிகள் பலவற்றை நிறுத்தியுள்ள நிலையில், பா.ஜ.க வழியிலேயே தமிழ்நாட்டில் உள்ள த.வெ.க. கூட்டணி அரசும் செயல்படுகிறது.
தாங்கள் பதவியில் இருப்பதற்காக தலித் மாணவர்களின் உழைப்பையும், கனவையும் குழிதோண்டிப் புதைக்கும் இந்த சோபாமாடல் அரசின் நாடகங்களை மக்கள் மன்றம் நிச்சயம் தண்டிக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.