

சென்னை,
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல்வேறு சேவை கட்டணங்களை உயர்த்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, தங்க ரத உலா திட்டத்துக்கான சேவை கட்டணம் ரூ. 2,500-லிருந்து ரூ. 5,000 ஆக உயர்த்த பரிசீலனை செய்யப்படுகிறது. அதேபோல், சண்முகார்ச்சனைக்கான கட்டணத்தை ரூ. 5,000-லிருந்து ரூ. 30,000 ஆக உயர்த்த திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அபிஷேக தரிசன கட்டணம் சாதாரண நாட்களில் ரூ. 500 என்றும், விழா நாட்களில் ரூ. 2,000 என்றும் இருந்ததை ரூ. 2,500 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய விலைவாசி உயர்வு மற்றும் கோயிலின் வருவாய் குறைவு ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த சேவைக் கட்டண உயர்வு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவிலில் தரிசனம் மற்றும் சேவை கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளது தொடர்பாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் மற்றும் சேவை கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக வரும் செய்திகள் பக்தர்களுக்கு சுமையை அதிகரிக்கும் செயலாகும். ஏற்கனவே திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்திற்காக புரோக்கர்கள் பக்தர்களிடம் வசூல் ராஜ்ஜியம் நடத்தி வரும் வேளையில் தற்போது கோவில் நிர்வாகத்தின் இந்த முடிவு முற்றிலும் ஏற்புடையதல்ல.
கோவில் கோவிலாக சென்று ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வரும் இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் இது குறித்து உடனடியாக தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். அவ்வாறு ஏதும் முடிவுகள் இருப்பின் உடனடியாக அதனை கைவிட்டு பக்தர்கள் மன நிம்மதியுடன் முருக கடவுளை தரிசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவிலுக்கான வருவாயை அதிகரிக்க மாற்று வழிகளை கண்டறிந்து பக்தர்கள் மேல் சுமையை ஏற்படுத்தும் தவெக அரசின் இந்து விரோத போக்கினை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளர்.