

சென்னை,
அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் நோக்கில் அக்கட்சியின் இரு தரப்பினரும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து சி.வி.சண்முகம் இல்லத்தில் இருந்து எஸ்.பி. வேலுமணி தலைமையில் 14 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இன்று புறப்பட்டனர். பறித்த கட்சி பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதாக தகவல் வெளியானது. எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்கினர்.
எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்புக்குப் பிறகு எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்தித்து சட்டப்பேரவை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததையும் வாபஸ் பெறுவதாக கடிதம் அளித்தனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் இடையேயான சமரச முயற்சி கைகூடியுள்ள நிலையில் இரு தரப்பினரும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அலுவலகத்துக்கு ஒன்றாக சென்றனர். அதேபோல, கொறடா விவகாரம் தொடர்பாக சபாநாயகரிடம் கொடுத்த கடிதத்தையும் திரும்ப பெற்றனர். ஒரே அணியாக இருப்பதாக சபாநாயகரிடம் தெரிவித்தனர். மேலும், எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக நியமிக்கக் கோரி சபாநாயகரிடம் கடிதம் வழங்கினர். அதேபோல, அதிமுக கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமிக்கக் கோரியும் சபாநாயகரிடம் மனு அளித்தனர்.
அதிமுகவின் இரு அணிகளும் தங்களது மனுக்களை வாபஸ் பெற்று ஒன்றிணைந்த நிலையில், முடிவை நாளை (வியாழக்கிழமை) அறிவிப்பதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ““தகுதிநீக்க மனுக்களை வாபஸ் பெறுவதாக அதிமுகவின் இரு அணிகளும் என்னிடம் மனு அளித்துள்ளனர். அவற்றை ஆராய்ந்து நாளை காலை எனது முடிவை அறிவிப்பேன்” என்று ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.