காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - ராமதாஸ்

தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்கும், கல்வித் தர மேம்பாட்டிற்கும் அடித்தளமாக விளங்கும் மாநிலப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் நீண்டகாலமாக காலியாக இருப்பது மிகுந்த கவலைக்குரியதாகும். தமிழகத்தில் செயல்பட்டு வரும் 22 மாநிலப் பல்கலைக்கழகங்களில் 16 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக இருப்பது உயர்கல்வித் துறையின் நிர்வாக செயல்பாடுகளையே முடக்கக்கூடிய அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல முக்கிய பல்கலைக்கழகங்கள் நிரந்தர துணைவேந்தர் இல்லாமல் இயங்கி வருகின்றன. மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் மற்றும் தமிழியல் கல்விக்கான முக்கிய பல்கலைக்கழகங்களிலும் இதே நிலை தொடர்கிறது.

துணைவேந்தர்கள் இல்லாததால் பல்கலைக்கழகங்களின் செனட் மற்றும் சிண்டிகேட் கூட்டங்கள் முறையாக நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்துதல், தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப கல்வித் திட்டங்களை புதுப்பித்தல், தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி நிதிகளைப் பெறுதல், புதிய கல்வித் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுதல் போன்ற முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், NIRF மற்றும் NAAC போன்ற தேசிய தரவரிசை மற்றும் தர மதிப்பீட்டு அமைப்புகளில் தமிழகப் பல்கலைக்கழகங்களின் நிலை பாதிக்கப்படும் அபாயமும் உருவாகியுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக துணைவேந்தர் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கும் கவர்னர் மாளிகைக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக உயர்கல்வித் துறை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்த நிலை தொடர்வது மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் எதிர்கால நலனுக்கு எதிரானதாகும்.

எனவே, தமிழகத்தின் உயர்கல்வி நலனை முதன்மையாகக் கருத்தில் கொண்டு, காலியாக உள்ள அனைத்து துணைவேந்தர் பணியிடங்களையும் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதற்காக உயர்கல்வித்துறை அமைச்சர் நேரடியாக கவர்னருடன் கலந்தாலோசித்து, தேடல் குழுக்கள் அமைப்பது மற்றும் நியமன நடைமுறைகளை விரைவுபடுத்துவது தொடர்பாக சுமுகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும்.

உயர்கல்வி என்பது அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு துறை. மாணவர்களின் கல்வி நலன், பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி மற்றும் தமிழகத்தின் அறிவுசார் முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, துணைவேந்தர் நியமனங்களை இனியும் தாமதப்படுத்தாமல் உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசும், கவர்னரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com