

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் 9-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி திட்டம் நாளை (ஜூலை 1) முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-2027-ம் ஆண்டு தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 1.25 லட்சம் மாடுகளுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி 1.7.2026 முதல் 10.8.2026 வரை கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
கோமாரி நோயானது ஒரு வகை வைரஸ் என்னும் நச்சுக்கிருமியினால் ஏற்படுகிறது. நோய் பாதித்த கால்நடைகளில் வாய் மற்றும் கால் பகுதியில் கொப்புளங்கள் ஏற்பட்டு அதிக காய்ச்சலுடன் காணப்படும். இந்த நோய் காற்றின் மூலம் எளிதில் பரவக்கூடிய ஒன்று. இந்நோய் பாதித்த கறவை மாடுகளில் பால் உற்பத்தி பெரிதும் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படவும் வாய்ப்புள்ளது, இதனால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே இந்த நோயை முற்றிலும் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம்.
தடுப்பூசி பணிக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது நடைபெறவுள்ள 9-வது சுற்று கோமாரி நோய் தடுப்புத் திட்டப் பணியில் தவறாது அனைத்து மாட்டினங்களுக்கும் விடுபாடின்றி தடுப்பூசி செலுத்தி பயன்பெறவும், தடுப்பூசி போடுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிடவும் அனைத்து கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.