சட்டமன்றத்தில் எனது கோரிக்கையை வழிமொழிந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு நன்றி - வானதி சீனிவாசன்

எனது ஆலோசனையை ஏற்றுக்கொள்வதாக அன்றைய சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறினார்.
சட்டமன்றத்தில் எனது கோரிக்கையை வழிமொழிந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு நன்றி - வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்
Published on

சென்னை,

சட்டமன்றத்தில் எனது கோரிக்கையை வழிமொழிந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு வானதி சீனிவாசன் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கன்னிப்பேச்சு

சட்டமன்றத்தில் இனி ‘கன்னிப் பேச்சு’ என்ற வார்த்தை இடம்பெறக் கூடாது. கடந்த 2021-ஆம் ஆண்டு கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்று, முதல் முறையாக நான் எம்.எல்.ஏ. ஆனபோது, இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட பலரும் அதை ‘கன்னிப்பேச்சு’ என்று குறிப்பிட்டனர்.

நாகரிகமாக இருக்கும்

சட்டமன்றத்தில் முதல் முறையாக எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தபோது, “வழக்கமாக சட்டமன்றத்தில் முதல் உரையை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுகிறீர்கள். ‘கன்னி’ என்ற வார்த்தை இளம் வயது பெண்ணை குறிக்கும் வார்த்தை. என்னை பொறுத்தவரை, இந்த முதல் பேச்சை ‘கன்னிப்பேச்சு’ என்று குறிப்பிடாமல், ‘அறிமுகப்பேச்சு’, ‘முதல் பேச்சு’ என்று குறிப்பிட்டால் நாகரிகமாக இருக்கும்” என்றேன்.

சட்டப்பேரவை தலைவர் அப்பாவு

அதற்கு பதிலளித்த அன்றைய சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, எனது ஆலோசனையை ஏற்றுக்கொள்வதாக கூறினார். ஆனால், இப்போது புதிதாக அமைந்துள்ள தவெக ஆட்சியிலும் ‘கன்னிப்பேச்சு’ என்றே குறிப்பிடுகின்றனர்.

அறிக்கை

இதை மாற்றி, ‘அறிமுக பேச்சு’ அல்லது ‘முதல் பேச்சு’ என்று குறிப்பிடுமாறு சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகரிடம் தெரிவிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தேன். அது பரவலாக கவனம் பெற்றிருந்தது. பலரும் என்னை தொடர்புகொண்டு, “முக்கியமான ஒரு விஷயத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்று பாராட்டினர்.

எதிர்ப்பு

அதை தொடர்ந்து, சட்டப்பேரவையில் இன்று பாமக சட்டமன்ற கட்சி தலைவர் சௌமியா அன்புமணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. லதாவும், ‘கன்னிப்பேச்சு’ என்று குறிப்பிடுவதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அறிமுக உரை

அதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், “கடந்த சட்டப்பேரவையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ‘கன்னிப்பேச்சு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக ‘அறிமுக உரை’ என்று பயன்படுத்தலாம் என்றும் ஆலோசனை வழங்கியிருந்தார்.

அப்போதைய சட்டப்பேரவைத் தலைவர் இதைப் பரிசீலிப்பதாக கூறியிருந்தார். சட்டப்பேரவை தலைவர் இதை பரிசீலித்து, ‘அறிமுக உரை’ என்று குறிப்பிடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.

நன்றி

எனது கோரிக்கையை ஏற்று, அதை வழிமொழிந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு எனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இனி சட்டமன்றத்தில் பேசும் எந்த உறுப்பினரும், ‘கன்னிப்பேச்சு’ என்று குறிப்பிடாமல், ‘அறிமுக உரை’ அல்லது ‘முதல் உரை’ என்றே குறிப்பிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com