முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் இன்று தகனம்

கார் விபத்தில் சட்லஜ் நதியில் மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பின்னர் நேற்று மீட்கப்பட்டது.
முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் இன்று தகனம்
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (வயது 45). இவர் தனது உதவியாளர் கோபிநாத்துடன் (35) இமாசலபிரதேசத்துக்கு சுற்றுலா சென்றார். அங்கு கடந்த 4-ந் தேதி மலைப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து, சட்லஜ் நதியில் விழுந்தது.

இதில் கார் டிரைவர் தஞ்ஜின் இறந்தார். கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். காணாமல் போன வெற்றியை தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையே சட்லஜ் நதியில் 6 கி.மீ. தொலைவில் பாறைக்கு அடியில் வெற்றியின் உடலை உள்ளூர் நீச்சல் வீரர்கள் கண்டுபிடித்து நேற்று பகலில் மீட்டனர். 8 நாட்களுக்கு பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவலை இமாசலபிரதேச போலீஸ் துணை கமிஷனர் அமித் ஷர்மா வெளியிட்டார்.

பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக சிம்லா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனையடுத்து வெற்றியின் உடல், ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை சென்னை கொண்டுவரப்படுகிறது.

இன்று உடல் தகனம்

வெற்றி துரைசாமியின் உடல் இன்று மாலை 5 மணிக்கு சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

அதன்பிறகு, மாலை 6 மணியளவில் கண்ணம்மாபேட்டை (தியாகராய நகர்) மயான பூமியில் தகனம் செய்யப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com