தமிழக மக்கள் கோவில்களை நெருங்கவிடாமல் தடுக்கத் திட்டமிடும் விஜய் அரசு - நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் கோவில் சேவைக் கட்டணங்களை அரசு உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சேவைக் கட்டணங்களை ஜோசப் விஜய் அரசு உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதோடு, கண்டனத்திற்குரியது.

சண்முகார்ச்சனை, ஒன்பது கால பூஜை, அபிஷேக தரிசனக் கட்டணம் என அனைத்து சேவைகளுக்கான கட்டணத்தையும் மூன்று மடங்கு வரை உயர்த்தும் இத்திட்டம் கோவில் வருவாயைப் பெருக்கவா? அல்லது ஏழை எளிய நடுத்தர மக்களை சுப்பிரமணிய சுவாமிக்கு சேவை செய்ய விடாமல் தடுப்பதற்கா? "கோவில் சொத்துகள் கோவிலுக்கே பயன்படுத்தப்படும்" என்று கவர்னர் உரையில் முழங்கிவிட்டு, இன்று அடித்தட்டு மக்களை கோவில் பக்கமே நெருங்கவிடாதபடி கட்டணத்தை உயர்த்தத் திட்டமிடுவதுதான் தூய சக்தியின் உண்மை முகமா?

"அனைவருக்குமான அரசு இது" என்று முதல்வர் விஜய் கூறுவது உண்மையாக இருந்தால், கோவில்களில் நிலவும் இதுபோன்ற தரிசன மற்றும் சேவைக் கட்டண முறையை முதலில் கைவிட வேண்டும்! கோவில் வருவாயைப் பெருக்கும் நோக்கில் பக்த கோடிகள் மீது நிதிச் சுமையை ஏற்றாமல், மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com