TN CM Live: நொடிக்கு நொடி மாறிய அரசியல் களம்.. தடைகளை தகர்த்து தமிழக முதல்-அமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய்

TN CM Live: நொடிக்கு நொடி மாறிய அரசியல் களம்.. தடைகளை தகர்த்து தமிழக முதல்-அமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

முதல்-அமைச்சர் பதவியேற்பு விழா - சுமார் 6,000 பேருக்கு அனுமதி

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் சுமார் 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக பாஸ் அனைவருக்கும் தரப்பட்டுள்ளது. நேரு விளையாட்டு அரங்கு அமைந்துள்ள பெரியமேடு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாஸ் இல்லாதவர்கள் வருவதை தடுக்க சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

எங்க வீட்டு பையன் தம்பி விஜய்க்கு வாழ்த்துக்கள் - பிரேமலதா விஜயகாந்த்

தே.மு.தி.க. பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவியேற்கவிருக்கும் எங்க வீட்டு பையன் தம்பி விஜய்க்கு மனபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் சிறந்த நிர்வாகத் திறமையுடன் செயல்பட்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என அன்பு தம்பி விஜய்க்கு கேப்டனின் சார்பாகவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகவும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விஜய் பதவியேற்பு விழா: நேரு ஸ்டேடியத்திற்கு ஆதவ் அர்ஜுனா வருகை

தவெக தலைவர் விஜய் இன்று முதல்-அமைச்சராக பதவியேற்கும் நிலையில் அக்கட்சியின் தேர்தல் பிரச்சார ஒருங்கிணைப்பாளர் ஆதவ் அர்ஜுனா ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திற்கு வருகை தந்துள்ளார்.

விஜய்யின் சென்னை இல்லத்தில் கான்வாய் வாகனங்கள் அணிவகுப்பு

இன்று தமிழக முதல்-அமைச்சராகப் பதவியேற்கவுள்ள தவெக தலைவர் விஜய்யின் சென்னை இல்லத்தில் கான்வாய் வாகனங்கள் வருகை தந்துள்ளது.

பதவியேற்பு விழா: விஜய் வீட்டிற்கு செங்கோட்டையன் வருகை

த.வெ.க. தலைவர் விஜய் இன்று முதல்-அமைச்சராக பதவியேற்கும் நிலையில் அக்கட்சியின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் விஜய் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

சென்னையில் விஜய் பதவியேற்பு விழா: டெல்லியில் இருந்து கிளம்பிய ராகுல் காந்தி

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் இன்று பதவியேற்க உள்ள நிலையில் சென்னையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து கிளம்பி உள்ளார்.

விஜய் பதவியேற்பு விழா நேரலை: சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் இன்று பதவியேற்க உள்ள நிலையில் பதவியேற்பு விழாவை நேரலையில் காண சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி கீழ்காணும் 20 இடங்களில் எல்.இ.டி. மின்னணுத் தொலைக்காட்சிகள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

1. அண்ணாநகர் டவர் பார்க்

2. மெரினா கடற்கரை

3. கோயம்பேடு சி.எம்.பி.டி

4. புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்டிட்ரல் ரெயில் நிலையம்

5. தி.நகர் பேருந்து நிலையம்

6. பெசன்ட் நகர் கடற்கரை

7. திருவான்மியூர் பேருந்து நிலையம்

8. கத்திபாரா நகர சதுக்கம்

9. செம்மொழிப் பூங்கா

10. தீவு திடல் பேருந்து நிறுத்தம்

11. நாகேஸ்வரராவ் பூங்கா

12. மயிலாப்பூர் டேங்க் ஏரியா

13. வடபழனி பேருந்து நிலையம்

14. எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதி

15. சோழிங்கநல்லூர் சந்திப்பு

16. மாதவரம் பேருந்து நிலையம்

17. போரூர் சந்திப்பு

18. அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம்

19. தொண்டியார்பேட்டை பஸ் டிப்போ பகுதி

20. அடையாறு டிப்போ சந்திப்பு

மேற்கண்ட இடங்களில் எல்.இ.டி திரையின் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

தமிழக முதல்-அமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய்

த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். அதனை ஏற்றுக்கொண்ட பொறுப்பு கவர்னர், த.வெ.க. தலைவர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

அதில், த.வெ.க. தலைவர் விஜய் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் அர்லேகர், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

இதனை தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்க உள்ளனர். வரும் 13-ந்தேதிக்குள் விஜய் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மக்கள் மாளிகை தெரிவித்துள்ளது.

த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்த கட்சிகள்

த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.) ஆகிய கட்சிகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் விஜய்யை சந்தித்து, 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர். இதனால், 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு த.வெ.க.விடம் இருந்தது. இந்த நிலையில், த.வெ.க. ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம் என்று சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் நேற்று முன்தினம் அறிவித்தன.

தொடர்ந்து, வி.சி.க.வும் தன்னுடைய ஆதரவை நேற்று தெரிவித்தது. இதேபோன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு அளித்துள்ளது. எனினும், ஆட்சியில் பங்கு கொள்ள மாட்டோம் என்றும் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப்படும் என்றும் அக்கட்சிகள் தெரிவித்தன. இதனால், த.வெ.க.வின் மொத்த பலம் 121 ஆக உயர்ந்துள்ளது.

இதில், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்யும்போது, த.வெ.க.வின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 120 ஆக இருக்கும். இது பெரும்பான்மைக்கும் (118) கூடுதல் ஆகும்.

108 இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க.

தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றின.

இதனால், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டது. எனினும், பெரும்பான்மையை (118 எம்.எல்.ஏ.க்கள்) நிரூபிக்க வேண்டிய சூழல் அக்கட்சிக்கு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com