“விசாரணையின் போது நடக்கும் வன்முறைகள் வருத்தமளிக்கிறது” - டி.ஜி.பி. சைலேந்திரபாபு

காவல்துறையின் கண்ணியம் குறையும் வகையில் காவலர்கள் யாரும் செயல்படக் கூடாது என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
“விசாரணையின் போது நடக்கும் வன்முறைகள் வருத்தமளிக்கிறது” - டி.ஜி.பி. சைலேந்திரபாபு
Published on

சென்னை,

தமிழக காவல்துறையினருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கடந்த ஆண்டு பல்வேறு சவால்களை வழக்கல் போல் தைரியமாக எதிர்கொண்டதாகவும், சட்டம்-ஒழுங்கு திறம்பட பேணிக் காக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடதமிழகத்தில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஆபரேசன் ரவுடி வேட்டை என்ற பெயரில் ஒடுக்கி வருவதாகவும், இதன் விளைவாக தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு 3,325 ரவுடிகளை கைது செய்து 1,117 அபாயகரமான ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

போதைப் பொருட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மூலம் இதுவரை இல்லாத வகையில் கடந்த ஆண்டு 23 டன் கஞ்சா, 20 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்றால் காவல்துறையைச் சேர்ந்த 139 பேர் உயிரிழந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களிடம் காவல்துறையைச் சேர்ந்த சிலரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும் விசாரணையின் போது நடக்கும் வன்முறைகள் வருத்தமளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். காவல்துறையின் கண்ணியம் குறையும் வகையில் காவலர்கள் யாரும் செயல்படக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ள அவர், குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com