

சென்னை,
திரு.வி.க.நகர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளராக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் காலை முதல் இரவு வரை வீதி, வீதியாக நடந்து சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். எங்கள் வீட்டு பெண் நீங்கள் உங்களுக்கு நாங்கள் கண்டிப்பாக இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்போம் என்று மக்கள் உறுதி அளித்து வருகின்றனர். மக்களிடம், பல்வேறு வாக்குறுதிகள் கொடுத்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பேசியதாவது:
இளைய சமுதாயத்தை சீரழிக்கும் போதை பொருட்களை ஒழித்து இளைஞர்கள் சுயமரியாதையுடன் வாழ கல்விக்கு முக்கியத்தும் அளிக்கப்படும். ஆம்ஸ்ட்ராங் மூலமாக 3 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சட்டக்கல்வி படித்து வக்கீல்களாக இருக்கி றார்கள். அதை முன் நிறுத்தி, இளைஞர்களுக்கு சட்டக்கல்வி பயில ஏற்பாடு செய்து தருவோம். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைக்கப்பட்டு, ஆர்வமுள்ளவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்படும்.
பெண்களின் விருப்பத்திற்கேற்ப தையல் பயிற்சி, கணினி பயிற்சி, ஓட்டுனர் பயிற்சி, வணிக மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் தொடங்க வழிவகை செய்யப்படும். இப்படி பல திட்டங்களை உங்களுக்காக செயல்படுத்த எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க. கட்டுப்பாட்டில் இருக்கும் திரு.வி.க.நகரை மீட்டு, வருங்கால முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.