

கரூர்,
1330 திருக்குறள்களையும் தலைகீழாக எழுதி அரசுப் பள்ளி மாணவர் ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
கரூர் மாவட்டம் கீழவெளியூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவர் சுதர்சன். சிறு வயது முதலே ஏதேனும் ஒரு துறையில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் இவருக்குள் இருந்துள்ளது. இதன் வெளிப்பாடாக, எழுத்துக்களை இடமிருந்து வலமாக மாற்றியமைத்து எழுதும் 'மிரர் ரைட்டிங்' கலையை அவர் கற்றுக்கொண்டார்.
இந்த முறையில் எழுதப்பட்ட தாள்களைக் கண்ணாடியில் காட்டினால் மட்டுமே அதில் உள்ள எழுத்துக்களை நேராகப் படிக்க முடியும். இத்தகைய கடினமான முறையில், 1333 திருக்குறள்களையும் முழுமையாக எழுதி முடித்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார் சுதர்சன்.
இதுகுறித்து மாணவனின் தாய் கூறியதாவது:-
"கீழவெளியூர் பகுதியில் இருந்து வரும் நாங்கள், எங்கள் மகன் மற்றும் மகளை இங்குள்ள அரசுப் பள்ளியில்தான் படிக்க வைக்கிறோம். என் மகன் எப்போதும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்றே நினைத்துக் கொண்டிருப்பான். ஒருநாள் அவன் எழுதியதைக் காட்டி, 'அம்மா இதைப் பார்' என்றான். எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அதன்பின்தான் இது 'மிரர் ரைட்டிங்' என்று விளக்கினான். சாதிக்க வேண்டும் என்று நினைத்தால், நம் தமிழ் மறையான திருக்குறளை இதில் எழுது என்று அவனுக்கு யோசனை கூறினேன்.
என் வார்த்தையை ஏற்று, ஒரே வாரத்தில் 1330 திருக்குறள்களையும் இந்த முறையில் எழுதி முடித்துவிட்டான்" என்றார். தன் கடின உழைப்பால் உருவான இந்தத் திருக்குறள் படைப்பை மாணவர் சுதர்சன் தனது பள்ளியில் காட்டியபோது, ஆசிரியர்களும் சக மாணவர்களும் அவரைப் பாராட்டி நெகிழ்ச்சியடைந்தனர். தமிழ் ஆர்வமும் தனித்திறமையும் கொண்ட இந்த அரசுப் பள்ளி மாணவனின் சாதனைக்கு இப்போது பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.