

சென்னை,
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய மாநிலம் முழுவதும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையால் எடுக்கப்பட்ட தொடர் தீவிர நடவடிக்கைகள் பற்றி டி.ஜி.பி அலுவலகம் விளக்கம். இது தொடர்பாக தமிழ்நாடு டி.ஜி.பி அலுவலகம் வெளியிட்ட செய்தியில், தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மாநிலம் முழுவதும் துரிதமான கள நடவடிக்கைகள், சமூக பங்களிப்புடன் கூடிய காவல் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
கடந்த 03.07.2026 முதல் 09.07 2026 வரை, மாவட்ட களப்பிரிவுகள் 371 புகார்களுக்கு சம்பவ இடத்திலேயே நடவடிக்கை எடுத்து, 25 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், காணாமல் போன 7 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த காலகட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே 3,882 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன், குற்றங்கள் நடக்க சாத்தியகூறுகள் உள்ள 9,507 இடங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அறிவுசார் குறைபாடுடைய 12 நபர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. ஒரு குழந்தை திருமணம் தடுக்கப்பட்டதுடன், 57 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.
தஞ்சாவூரில் பள்ளி மாணவிகள் அளித்த பாலியல் தொந்தரவு புகாரின் அடிப்படையில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இரு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல்லில், மாணவி அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளி கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டில், அரசு பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரத்தில், பிச்சையெடுக்க வற்புறுத்தப்பட்ட அறிவுசார் குறைபாடுடைய பெண் ஒருவர் மீட்கப்பட்டு அவரது பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு உறுதி செய்யப்பட்டது. திருப்பூரில், பள்ளிக்கல்வி துறை மற்றும் குழந்தைகள் உதவி எண் அமைப்புடன் இணைந்து 33 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில், சிங்கப்பெண் சிறப்பு படை துரிதமான கள நடவடிக்கைகள், சமூக பங்களிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை காவல் பணிகள் மூலம் தனது சேவையை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.