பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன..?

உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன..?
Published on: 

சென்னை,

தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வந்தார். தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் விஜய்யும் கலந்து கொண்டனர்.

ரெயில்வே திட்டங்கள்

இந்த நிகழ்ச்சியின்போது, தமிழ்நாட்டில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். குறிப்பாக, 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 750 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, புனரமைக்கப்பட்ட 5 ரெயில் நிலையங்களை திறந்து வைத்தார்.

பொருளாதார வளர்ச்சி

அந்த விழாவில் பேசிய முதல்-அமைச்சர் விஜய், "பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரெயில் திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. தமிழ்நாடு பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்த பண்பாடுகளையும், அவற்றை இன்றளவும் உயிர்ப்புடன் பேணி பாதுகாத்து வரும் மக்களையும் கொண்ட சிறப்புமிக்க மாநிலமாகும்.

உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழை தாய்மொழியாக கொண்ட மக்கள் வாழும் இம்மாநிலம், சிறப்பான வரலாறு, இலக்கியம், கலை, கட்டிடக்கலை மற்றும் பண்பாடு மரபுகளால் தனித்துவம் பெற்றுள்ளது.

'பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்' என்ற உயரிய தத்துவத்தின் அடிப்படையில் நமது அரசு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்து கல்வி, சுகாதாரம், வேளாண் வளர்ச்சி, மீனவர் நலன் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

நமது அரசு குழந்தைகள், பெண்கள், திருநர்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களைத் தீட்டி, சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

புதிய வாய்ப்புகள்

தமிழ்நாடு தொழில், அறிவியல், கல்வி, கலை, இலக்கியம், சமூகநீதி ஆகிய துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களித்து வரும் மாநிலமாகும். ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படும்போது அதன் பலன் நேரடியாக மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதே நமது அணுகுமுறை.

தமிழ்நாடு புதிய வாய்ப்புகளை உருவாக்கி, 2036- ஆம் ஆண்டில் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கினை நோக்கி வேளாண்மை, தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திட்டங்களைத் தீட்டி வருகிறது. இந்த வளர்ச்சியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல புத்தாக்கம், தொழில் முதலீடு, உள்கட்டமைப்பு ஆகிய மூன்றிற்கும் நாம் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறோம். அதே நேரத்தில் வளர்ச்சியின் பயன், சென்னை மாநகரத்தை தாண்டி தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறோம்.

தமிழ்நாட்டின் இளைஞர்கள், நமது மிகப்பெரிய பலம். அவர்களின் திறமை, தொழில்நுட்ப அறிவு, புதுமை சிந்தனை ஆகியவற்றை உலகளவிலான வாய்ப்புகளுடன் இணைப்பதே நமது இலக்கு. இன்று நாம் தொடங்கும் மற்றும் நிறைவேற்றும் திட்டங்கள், அடுத்த தலைமுறைகளுக்காக முதலீடுகளாக அமைய வேண்டும்” என்று கூறினார்.

கோரிக்கைகள்

இந்நிலையில் அந்த நிகழ்வின்போது பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் விஜய் முக்கியமான சில கோரிக்கைகளை முன்வைத்தார்.

அது பின்வருமாறு:-

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 3ஆம் கட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும்.

கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஓசூர்-பொம்மசந்திராவுக்கு மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

சமக்ர சிக்ஷா திட்டத்தின் (Samagra Shiksha) கீழ் தமிழ்நாட்டிற்கு மத்தியஅரசு வழங்க வேண்டிய ரூ.5,110 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்

கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும்

சென்னை -கன்னியாகுமரி, சென்னை - கோவை இடையே அதிவேக ரெயில் வழித்தடங்கள் அமைக்க கோரிக்கை;

செங்கல்பட்டு - திருச்சி இடையேயான ஜிஎஸ்டி சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும்;

திருச்சி - பஞ்சப்பூர் - ஜெயபுரம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்க வேண்டும்;

கரூர் - கோவை சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும்;

மாதவரம் - சோழவரம் இடையே உயர்மட்டச் சாலை அமைக்க வேண்டும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com