தந்தை போல் மகனும் குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும்? - தங்கர் பச்சான் பரபரப்பு பதிவு

பா.ம.க.வில் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பா.ம.க.வில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கட்சியில் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு, நிர்வாகிகள் நீக்கம், சேர்ப்பு என புதிய, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். கட்சியில் தங்களது பலத்தை நிரூபிக்க இருவரும் போட்டி கூட்டத்தையும் நடத்துகிறார்கள்.

இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ், தந்தையின் மீதான மதிப்பு வரலாற்றில் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் பதிலுரை கூறாமல் அமைதி காக்கிறார் என்று இயக்குநர் தங்கர் பச்சான் கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நாள்தோறும் மகன் மீது குற்றம் சுமத்தும் தந்தை போல், மகனும் தந்தை மீது குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும்? தந்தையின் மீதான மதிப்பு வரலாற்றில் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே மகன் அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் பதிலுரை கூறாமல் அமைதி காக்கிறார் எனும் பெருந்தன்மை இப்பொழுது புரியாமல் போகலாம்!

கடந்த காலங்களில் பொறாமையினாலும், வயிற்றெரிச்சலினாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது வன்மத்தை ஊடகங்களில் கக்கி பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தவர்கள் யார், யார் என்பது இம்மக்களுக்கு புரியும்!

சமூக வலைதளத்தை பயன்படுத்தி வயிறு வளர்த்துக் கொண்டிருக்கும் இந்த ஓநாய்கள் எல்லாம் இப்போது ஐயாவை புகழ்வதுபோல் புகழ்ந்து கட்சியை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும் மக்கள் நன்கு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

புறணிப்பேசி வயிறு வளர்க்கும் இத்தகைய சமூக வலைதளப் போராளிகளின் மானம் கெட்ட பிழைப்பு நெடுநாள் நடக்காது என்பதை காலம் விரைவில் உணர்த்தும்! காத்திருங்கள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com