தந்தை-சித்தியை துண்டு துண்டாக வெட்டிக்கொன்றது ஏன்? - கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

இரட்டை கொலை தொடர்பாக கைதான வாலிபர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கோனேரிப்பட்டி பூசாரிக்காட்டை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 45). கோவில் விழாக்களில் பட்டாசு வெடிக்கும் வேலை செய்து வந்தார். இவருடைய முதல் மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஆகாஷ் (22), சஞ்சய் என்ற 2 மகன்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2-வது மகன் சஞ்சயுடன் ஜெயந்தி வசித்து வந்தார்.
இதையடுத்து கணவரை பிரிந்து 17 வயது மகளுடன் வசித்து வந்த ஜெயலட்சுமி (40) என்பவரை பழனிசாமி 2-வதாக திருமணம் செய்து கொண்டார். ஒரே வீட்டில் பழனிசாமி தனது 2-வது மனைவி ஜெயலட்சுமி, மகன் ஆகாஷ் மற்றும் ஜெயலட்சுமியின் மகள் ஆகியோருடன் வசித்து வந்தார். ஆகாஷ் இளம்பிள்ளையில் உள்ள அவரது சித்தப்பா அருள் என்பவரது இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் பழனிசாமி மற்றும் ஜெயலட்சுமி ஆகியோரை கடந்த 16-ந் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சந்தேகத்தின்பேரில் ஆகாசை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், தந்தை பழனிசாமி மற்றும் சித்தி ஜெயலட்சுமி ஆகியோரை இறைச்சி வெட்டும் கத்தியால் துண்டு, துண்டாக வெட்டிக்கொன்றதும், உடல் பாகங்களை 3 சாக்குப்பைகளில் மூட்டையாக கட்டி ஏகாபுரம் மற்றும் தாழையூர் ஏரிகளில் வீசியதும் தெரியவந்தது. இதற்கு ஜெயலட்சுமியின் மகளும் உடந்தையாக இருந்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த ஏரிகளுக்கு சென்று உடல் பாகங்களை மீட்டனர்.
அதைத்தொடர்ந்து இந்த இரட்டை கொலை தொடர்பாக ஆகாசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் ஆகாஷ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், “தந்தை பழனிசாமி, சித்தி ஜெயலட்சுமி மற்றும் அவருடைய 17 வயது மகள் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தேன். சமீப காலமாக தந்தை பழனிசாமி சித்தி மகளிடம் தவறாக நடக்க முயன்றார்.
இதுகுறித்து தங்கை என்னிடம் ஏற்கனவே தெரிவித்தார். கடந்த 15-ந் தேதி இரவு மீண்டும் எனது தந்தை, தங்கையிடம் தவறாக நடந்து கொண்டார். இதை பார்த்து ஆத்திரமடைந்த நான் தந்தையை பிடித்து கீழே தள்ளினேன்.
இந்த நேரத்தில் அங்கு வந்த சித்தி ஜெயலட்சுமி என்னிடம் ஏன் அவரை அடிக்கிறாய்? எனக்கூறி என்னை அடிக்க பாய்ந்தார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற நான், தந்தை பழனிசாமி மற்றும் சித்தி ஜெயலட்சுமி ஆகியோரை கீழே பிடித்து தள்ளி இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டி கொன்றேன். மேலும் அவர்களது தலை, கை, கால்களை தனித்தனியாக வெட்டினேன். பின்னர் உடல் பாகங்களை தங்கையுடன் சேர்ந்து சாக்குப்பைகளில் போட்டு கட்டினேன்.
அந்த சாக்குப்பைகளை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்று ஏகாபுரம், தாழையூர் ஏரிகளில் வீசினேன். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என்னிடம் தந்தை மற்றும் சித்தி குறித்து கேட்டனர். அவர்களிடம் வெளியூருக்கு வேலைக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தேன். பின்னர் போலீசாரின் விசாரணை வளையத்தில் நான் சிக்கி கொண்டேன்” என்று தனது வாக்குமூலத்தில் கூறினார்.






