பலாப்பழ சீசன் முடியும் வரை காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிக்க வாய்ப்பு - வனத்துறை தகவல்

காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
பலாப்பழ சீசன் முடியும் வரை காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிக்க வாய்ப்பு - வனத்துறை தகவல்
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி, தேயிலை தோட்டங்கள் உள்ளது. இதனால் வன விலங்குகளின் வாழ்விடமாக விளங்குகிறது. நீலகிரியில் தற்போது பலாப்பழ சீசன் என்பதால், கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதி வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் ஊருக்குள் அதிக அளவு வந்து முகாமிட்டு வருகின்றன. மேலும் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மரங்களில் விளைந்துள்ள பலாப்பழங்களை தேடி காட்டு யானைகள் வருகின்றன.

அவ்வாறு வரும் யானைகள் பலாப்பழங்களை ருசித்து சாப்பிட்டு விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் செல்வதில்லை. தொடர்ந்து ஊருக்குள் உலா வந்த வண்ணம் உள்ளது. மேலும் இரவு, பகல் என எந்த வேளையிலும் பலா மரங்களை சுற்றி வந்தவாறு இருக்கிறது. கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் கெவிப்பாரா ராக்லேண்ட் தெரு எதிரே தனியார் தோட்டத்துக்கு நேற்று மாலை காட்டு யானை வந்தது.

பின்னர் அப்பகுதியில் உள்ள மரத்தில் முன்னங்கால்களை மரத்தில் தூக்கி வைத்தவாறு யானை துதிக்கையால் பலாப்பழங்களை பறிக்க முயன்றது. முக்கிய சாலையோரம் என்பதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பகலில் காட்டு யானை பழங்களை பறிக்க முயற்சி செய்வதை பார்த்தனர். இதனால் மக்கள் கூட்டம் அதிகரித்தது.

இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் காட்டு யானை நுழைய முயன்றது. இதைக்கண்ட மாணவிகள் கூச்சலிட்டனர். இதனால் யானை கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போன கதை போல், அங்கிருந்து கோக்கால் மலையடிவாரத்துக்கு சென்றது. அதன் பின்னரே பொதுமக்கள், மாணவிகள் நிம்மதி அடைந்தனர்.

இருப்பினும், பலாப்பழங்களை தேடி காட்டு யானை மீண்டும் அப்பகுதிக்கு வரக்கூடும் என பொதுமக்கள் வனத்துறையினரிடம் தெரிவித்தனர். அப்போது தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். மேலும் பலாப்பழ சீசன் முடியும் வரை காட்டு யானைகள் ஊருக்குள் அதிகமாக வர வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். இரவில் தனியாக வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com