

சென்னை,
காலை உணவுத் திட்டத்தை 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் விரிவுபடுத்துவது குறித்து தமிழக அரசு கருத்து தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட முதல்-அமைச்சர் காலை உணவுத் திட்டம், தற்போது காமராஜர் காலை உணவுத் திட்டம் என்ற பெயர் மாற்றத்துடன் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் வரும் 17-ந் தேதி முதல் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தை விருதுநகரில் காமராஜர் படித்த தொடக்கப் பள்ளிக்கே நேரில் சென்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கிவைக்க இருக்கிறார்.
இந்த நிலையில், கோவையை சேர்ந்த சி.ஐ.டி.யு. பொதுச் தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளர் எஸ்.பாஷா என்பவர், தமிழக அரசின் சமூக நல இயக்குநரகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அதில், "காமராஜர் காலை உணவுத் திட்டம் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். குறிப்பாக, 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் நிலையில், அவர்களின் உடல் மற்றும் மனநலத்திற்கும், கவனச் செலுத்தல் மற்றும் கல்விச் செயல்திறனுக்கும் போதிய ஊட்டச்சத்து அவசியமானதாகும்" என்று அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், அவருக்கு தமிழக அரசின் சமூக நல இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநர் கா.பொற்கொடி பதில் அனுப்பியுள்ளார். அதில், "தங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அவர், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கும் விரிவுபடுத்துவது குறித்த தங்களது கோரிக்கை அரசுக்கு தெரிவிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.